முதல் வைத்திய மாணவி: பெருமை கொள்ளும் குமுழமுனை மகாவித்தியாலயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை மகாவித்தியாலயம் தன் முதலாவது மருத்துவ மாணவியை கண்டு கொண்டது.
2022 (2023) உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி செழியன் தட்சாயினி மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
வைத்திய விஞ்ஞானி என்ற உச்சம் தொட எண்ணி வைத்தியத்துறைக்கு தேர்வாகும் மாணவி தட்சாயினி.
பாடசாலையின் அதிபர் பேசுகிறார்
குமுழமுனை மகாவித்தியாலயம் கடந்த 2015 ஆம் ஆண்டு 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
இதன் பின்னரே அந்த பாடசாலையில் உயர்தரம் உயிரியல் மற்றும் கணிதம் பாடப் பிரிவுகளுக்கான கற்றல் கற்பித்தல் அலகுகள் தொடங்கப்பட்டது.
அதுவரை காலமும் தமிழ் மற்றும் வணிகப் பிரிவுகளில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வசதிகளே இருந்தன.
உயர்தர உயிரியல் பிரிவு ஆரம்பமானதால் குமுழமுனை பாடசாலையின் மாணவர்கள் உயர்தர உயிரியல் பிரிவில் கல்வியைத் தொடர வாய்ப்பெட்டியது.
பாடசாலையின் கனடா பழைய மாணவர் சங்க கிளையும் பாடசாலை பழைய மாணவர் சங்கமும் இணைந்து மாணவர்களின் கல்வியை முன்னெடுப்பதில் பாடசாலையுடன் கைகோர்த்து செயற்படுகின்றனர்.
செ.தட்சாயினியின் கல்விச் செயற்பாடுகளை தொடர்வதற்கு அவருக்கு மாதாந்த உதவித்தொகையை கனடா பழைய மாணவர் சங்கத்தினர் வழங்கி வந்திருந்தார்கள்.
செல்வி செ.தட்சாயினி
குறித்த மாணவி பற்றி குறிப்பிடும் போது அமைதியும் ஆர்வமும் கொண்ட தன்னம்பிக்கை மிக்க மாணவி என்பதோடு விடா முயற்சியும் கொண்டவர் என பாடசாலையின் தற்போதைய அதிபர் வி.ஜெயவீரசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையின் மருத்துவ பட்டப்படிப்புக்கு தெரிவான முதல் மாணவி என்பதையிட்டு தாமும் தம் பாடசாலை சமூகமும் பெரும் மகிழ்ச்சியடைவதாக மேலும் கூறியுள்ளார்.
இராசாயனவியல் பாட ஆசிரியர் மகேஸ்வரன் கூறுகையில்,
நிறைந்த சவால்களை எதிர்கொண்டு கற்பித்தலை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். உயர்தரம் 2022 விஞ்ஞானப் பிரிவில் ஒரேயொரு மாணவியே கல்வி கற்றார். அவர் தான் செல்வி செ.தட்சாயினி.
இன்றைய சமூகச் சூழலின் நோக்கு மற்றும் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் என்பனவற்றையும் கருத்திலெடுத்து கற்பித்தலை மேற்கொண்ட போது அதிக மன துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
சமூகத்தின் இன்றைய போக்கினால் இந்த உணர்வு ஆசிரியரிடம் ஏற்பட்டது என்பதை அவருடன் தொடர்ந்து பேசிய போது அறிய முடிந்தது. மாணவி ஆர்வமும் விடா முயற்சியும் கொண்டவர். சுயகற்றலில் ஆதீத ஈடுபாடு இருந்தமையால் பாடப்பரப்புக்களை முன்னகர்த்தி செல்வது இலகுவாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆசிரியரின் வழிகாட்டல்களை ஏற்று பொறுப்புணர்வோடு செயற்படுவதும் தேடலோடு கற்றலும் இந்த வெற்றிக்கு வித்திட்டது. ஏனைய மாணவர்களைப் போலல்லாது இலக்கு நோக்கிய பயணத்திலும் ஆசிரிய சமூகம் மீதும் அதிக பொறுப்புணர்வை தட்சாயினி வெளிக்காட்டியிருந்தார் எனவும் குறிப்பிடார்.
சிறுவயதிலிருந்து பல ஆசிரியர்களின் வழிகாட்டல்களை கடந்து வந்து உயர்தரம் படிக்கின்றனர். அவர்களை நெறிப்படுத்துவதும் அதன் போது கிடைக்கும் வெற்றியும் உயர்தர பாட ஆசிரியரை மட்டும் சாராது.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், அயலவர்கள், ஊர் மக்கள் என எல்லோரது கூட்டுமுயற்சியுமே தட்சாயினின் வெற்றியின் இரகசியம் என எடுத்துரைத்தார்.
தட்சாயினின் அம்மா என்ன சொல்கின்றார்?
மிகக் கடினமான போராட்டத்துடனேயே உயர்தர கற்பித்தலை எதிர்கொண்டோம். வீட்டின் வறுமை ஒரு பக்கம். மேலதிக வகுப்புக்களுக்காக 10 கிலோமீற்றர் பயணமாகி முள்ளியவளையில் உள்ள கல்வி நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலவரம்: யுத்தத்தின் போது கூட இல்லாத நிலை(Photos)
போக்குவரத்து வசதிகள் போதியளவில் இல்லை. க.பொ.த (சா/த) பரீட்சையில் 9A பெறுபேறுகளை பெற்றார். உயர்தரம் உயிரியல் பிரிவில் கல்வியைத் தொடர விரும்பினார். நாம் உதவியாக இருந்தோம் என கூறினார்.
கனடா பழைய மாணவர் சங்கம் மாதாந்தம் பத்தாயிரம் ரூபாவினை கற்றல் செயற்பாட்டுக்காக வழங்கி வந்ததாகவும் முல்லைத்தீவு கல்வி வலயம் மாதாந்தம் மூவாயிரம் ரூபாவினை கற்றல் செயற்பாடுகளுக்காக வழங்கி வந்ததாகவும் குறிப்பிட்டார்.
கனடா பழைய மாணவர் சங்கம் தொடர்ந்து மாதாந்தம் உதவிய போதும் முல்லைத்தீவு கல்வி வலயம் உதவித்தொகையை வழங்கியதில் கிராமமான போக்கினை பேணவில்லை என்பதனையும் அவருடன் பேசும் போது அறிய முடிந்தது. தந்தை கூலி தொழிலாளியாக இருக்கின்றார்.
குறைந்த எண்ணிக்கையிலான மாடுகளை வளர்ப்பதும் கூலிக்கு வேலை செய்வதுமாக சிறிய வருமானத்தை பெறுகின்றார். உந்துருளியை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதால் எரிபொருள் செலவு அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அவர்கள் சார்ந்த சமூகமும் பழைய மாணவர் சங்கத்தினரும் அவர்களுக்கு ஆறுதலாகவும் உந்துசக்தியாகவும் இருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
தட்சாயினின் கருத்துக்கள்
“பொருந்தாத சூழலில் வாழ்ந்து வெற்றியை நோக்கி ஓடி பெற்ற வெற்றி இது. அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டது. கோவிட் காலமாக இருந்தமையானது பாடசாலையில் தொடர்ச்சியான கற்றல் செயற்பாடுகளை பாதித்தது.
பாடப்பரப்புக்களை முழுமையாக கற்றுத் தேற முடியவில்லை. கல்வி நிலையங்களிலும் இதே நிலைதான். அத்தோடு கல்வி நிலையத்தில் ஆசிரியர்கள் சீரான கற்பித்தலை மேற்கொள்வதில்லை. அங்கும் முழுமைப்படுத்தப்பட்ட கற்றலை பெற முடியவில்லை.
கல்வி நிலையங்களுக்கு வரவொழுங்கை சீராக பேணாத ஆசிரியர்கள்; தனி மற்றும் குழு வகுப்புக்களில் ஒழுங்கை பேணினார்கள். இரு இடங்களிலும் ஒரு ஆசிரியர்கள் என்பது தான் வருத்தம்.
பாடப்பரப்புக்களில் எழும் சந்தேகங்களை உரிய நேரங்களில் கேட்டு தெளிவு பெற முடியாதது பெரும் கவலையளித்தது. அந்த வசதி இருந்திருந்தால் பௌதிகவியலில் ஏனைய பாடங்களைப் போல A சித்தி பெற்றிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் பொருந்தாத போக்கு
முல்லைத்தீவு கல்வி வலயத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உயர்தர ஆசிரியர்கள் அதிக வருமானத்தை பெற்றுத் தரும் மேலதிக தனிநபர், குழு வகுப்புக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கி வருகின்றனர்.
கல்வி நிலையங்களிலும் பார்க்க மேலதிக வகுப்புக்களுக்கு வருமானத்தை முன்னிறுத்தி செயற்படுகின்றனர். பாடசாலையில் கற்பித்தலை மேற்கொள்ளும் அதே ஆசிரியர்கள் அதே மாணவர்களுக்கு வீடுகளில் மேலதிக தனிநபர் மற்றும் குழு வகுப்புக்களுக்கு அதிக பணத்தை பெற்று கற்பிக்கின்றனர்.
ஏன் பாடசாலையில் அவர்களால் கற்பிக்க முடியவில்லை? இந்த அணுகுமுறை திறமையான வறிய மாணவர்களை பாதிக்கும் என்பது இன்னும் உணரப்பாடதது வருந்தத்தக்கது.
தட்சாயினி கற்றலின் போது இந்த கசப்பான நிகழ்வுகளையும் எதிர்கொண்டுள்ளார் என்பதை அறிய முடிந்தது.
எதிர்கால கனவு
இதேவேளை “சிறந்த வைத்தியராவதுடன் தன் தாய்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னையும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வைத்திய விஞ்ஞானி என்ற உச்சத்தை தொட்டுவிட வேண்டும்” என குறிப்பிட்டார் மாணவி செ.தட்சாயினி.