தமிழர் தாயகத்தின் அடையாளமாக விளங்கும் கற்பகதருவின் இன்றைய நிலை
பனை மரத்திற்கும் தமிழர்களுக்கும் மிக நீண்டதொரு வரலாறு உண்டு. இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதிகளிலேயே அதிகமாக இந்த பனை மரங்களும் உண்டு.
குறிப்பாக ஈழத்திற்கும் பனை மரத்திற்குமான தொடர்பு உணர்ச்சிபூர்வமானது என்று கூட சொல்லலாம். இலங்கையில், பனைமரங்களைப் பாதுகாக்கவும், அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யவும் தனித் துறையே உண்டு.
பனம் பழத்தினை வைத்து செய்யப்படும் உணவுகளும் மிக பெயர்பெற்றவை. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் அது தொடர்பான ஏக்கங்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துவதை பார்க்கலாம்.
ஆனால் அருகில் இருந்தும், வளம் இருந்தும் அதனை கண்டுகொள்ளாமல், பாராமுகமாய் இருந்துச் செல்லும் போக்கு தமிழர் தாயகத்திலேயே தற்போது உண்டு.
கற்பகதரு
யாழ்ப்பாணம், வன்னி பெருநிலப்பரப்பு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என தமிழர் தாயக நிலமெங்கும் பனைகள் அதிகம் உள்ளன. "அந்தப் பனை மரம் அடிக்கடி நினைவில் வரும்." என்ற ஈழத்து அழகை மெச்சும் பாடலொன்றும் உண்டு.
பனை மரங்களில் இருந்து கிடைக்கும் எல்லா பகுதிகளும் பயனுடையது என்பதாலேயே பனையை "கற்பகதரு" என அழைக்கின்றோம்.
முன்னரே கூறியது போல பனம் பழம் கொண்டு செய்யப்படும் உணவுகளுக்கு மதிப்பு அதிகம் என்பதோடு அதனுடைய சுவையும் தனித்துவமானது..
இப்போது பனம் பழங்கள் அதிகம் கிடைக்கின்றது. அவற்றைக் கொண்டு பல உணவுகளை தயாரித்து உண்ண முடிந்த போதும் ஈழத்தில் அவை அருகிப் போவது கவலையளிக்கிறது.
கோதுமை மாவுடன் பனம் பழச்சாறை சேர்த்து எண்ணெயில் பொரித்து பெறப்படும் பனங்காப் பலகாரம். அரிசி மாவுடன் பனம் பழச்சாறைச் சேர்த்து செய்யப்படும் மா உருளைகளை தேங்காய்ப்பாலில் இட்டு அவித்து பெறப்படும் பனங்காய்ப் பால்வடி.
பனம்பழச்சாறை கொண்டு செய்யப்படும் பனாட்டு இப்படி மிகச் சுவையான உணவுகளை பனம் பழம் கொண்டு செய்யும் திறன் தாயகத் தமிழர்களுக்கு உண்டு.
பனங்கிழங்கை பச்சையாகவும் அவித்தும் ஒடியல் போட்டு பயன்படுத்துவார்கள், அவித்த கிழங்கை நேரடியாக கிழங்காகவும் உண்பது இயல்பான தமிழர் பண்பாடாக இருந்து வந்துள்ளது. இவை தமிழர் கலாசாரத்தோடு ஒன்றித்துப் போன ஒன்றாக இருக்கின்ற போதும் சமகாலத்தில் இந்த நடைமுறைகளில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.
வீணாகும் பனம் விதைகள்
பனை மரத்தில் தேவையற்றது என்று எதுவுமே கிடையாது. பனம் பழம் முதற்கொண்டு அதன் வேர் வரை இலாபம் ஈட்டித் தரக்கூடிய ஒன்றாக இதுவரை இருந்துள்ளது.
பனை மரங்களைக் கொண்டு பல்வேறு கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும், அவற்றை வாழ்வாதாரத் தொழிலாக ஏற்று செய்பவர்களையும் முன்னர் பல்வேறு இடங்களிலும் காணலாம்.
ஆனால் காலப் போகில் அவை மருகி, இன்று அங்கும் இங்கும் என்று மூலைக்கொரு பனை சார் கைத்தொழிலாளியையே காண முடிகின்றது. குறிப்பாக, பனைமரங்களின் கீழே இருக்கும் பனம் விதைகளை பெற்று பனங்கிழங்கு உற்பத்தி செய்யும் பண்பாடு இப்போது மிகவும் அருகி வருகின்றமை எதிர்கால தமிழ்ச் சமூகத்திற்கு நல்லதல்ல.
அதிக நார்ச்சத்தும் காபோவைதரேற்றின் மாச்சத்தையும் கொண்ட பனங்கிழங்குகளை மூலப்பொருளாக கொண்டு ஒடியல், ஒடியல் மா,மாக்கூட்டு என்பவற்றை உற்பத்தி செய்வார்கள், எனினும், பனம் விதைகளைச் சேகரித்து பனங் கிழங்கை உற்பத்தி செய்வோரின் தொகை பெரியளவில் தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது.
அழிக்கப்படும் பனைகள்
அதேசமயம், தாயக பகுதி எங்கும் பெருமளவில் காணப்பட்ட பனை மரங்கள் சமகாலங்களில் பாரிய அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன.
குறிப்பாக, தாயகப் பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது அதிகளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னரான, மக்களின் மீள் குடியேற்றத்தின் போது வீட்டுத் திட்டங்களுக்காகவும் வியாபார நோக்கில் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்வதற்காகவும் அதிகளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இப்போது விவசாய நிலங்களின் அபிவிருத்திக்கென்றும் பனைமரங்கள் அழிக்கப்படுகின்றன.
வவுனியா மாவட்டத்தின் குளவிசுட்டான் நிலங்களில் இருந்த பனைமரங்கள் அதிகமாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பனம் பழங்கள் நிலத்தில் விழுந்து காணப்படுவதால் யானைகள் வருகின்றன. யானைகளால் விவசாயம் அழிகின்றது என்றும் காணி முழுவதும் பனைமரங்கள் காடாகின்றன என்றும் அவ்வூர் மக்கள் விளக்கமளிக்கின்றனர்.
பனை தென்னை அபிவிருத்தி சங்கம்
இலங்கையில், பனை தென்னை உற்பத்திகளுக்காக உருவாக்கப்பட்ட சங்கம் "கள்" உற்பத்தியையும் பாரம்பரிய ஓலை கைவினைப் பொருட்களின் உற்பத்தியையும் கருதிலெடுத்துள்ள போதும் கள் உற்பத்தியை மட்டுமே முதன்மையாக கொண்டுள்ளன.
பதனீர் கொண்டு கருப்பட்டி உற்பத்தியும் போதியளவில் இல்லை.
பனம் விதைகளைக் கொண்டு மேற்கொள்ளக்கூடிய உற்பத்திகளுக்கும் முன்னுரிமை
வழங்கலாம் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.
இவற்றுக்கென விசேடமான தொழிற்சாலைகளை ஆக்குதல் ஒரு பொருத்தமான முயற்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வன்னி பெருநிலப்பரப்பில் அதிகளவில் நிறைந்துள்ள வளம் பனை வளம். அதனை பயன்படுத்தி நலம் பெறும் வகையில் எந்த திட்ட முன்னேற்றங்களையும் காணவில்லை.
புலம் பெயர் தேசங்களில் இருந்து ஈழத்தமிழருக்கு கிடைக்கும் பெருமளவு உதவிகள் அவர்களது மனித வளத்தை உரிய முறையில் பயன்படுத்திச் செல்ல உதவவில்லை.
தாயக மண்ணின் வளங்கள் வீணாகிச் செல்கின்றன. ஈழத் தமிழரில் பெரும் பகுதியினர் பொருத்தமான வளங்களைக் கொண்டு சிறந்த தொழில் முன்னெடுப்புக்களை இதுவரை சிந்திக்கவில்லை என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மக்களிடையே விழிப்புணர்வு வேண்டும்
முல்லைத்தீவில் சுவமி தோட்டம் மற்றும் பளையில் தென்னை பயிர்ச் செய்கை காணிகளின் வேலிகளில் பனைகளை நாட்டி பராமரித்து வருகின்றனர். ஒரு புறம் பனைகள் அழிக்கப்படுகின்றன. மற்றொருபுறம் பனைகள் நாட்டி வளர்க்கப்படுகின்றன.
எனினும் அழிக்கும் செயற்பாடு நாட்டுவதிலும் விரைவானதாக இருப்பது கவலைக்குரியது. தாயக மக்களிடையே சுய தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளித்து பனைவளம் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |