புளியம்பொக்கனைச் சந்தியில் பெரிய ஆபத்து! அபிவிருத்தி காணாத தமிழர் பகுதி
இலங்கையை பொறுத்த வரையில் பெரிய நகரங்களில் ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் சரியான காலப்பகுதிக்குள் இல்லாவிட்டாலும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் முடிக்கப்பட்டு விடும்
ஆனால், கிராமப் புறங்களிலும் சிறிய நகர்ப் பகுதிகளில் ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் அவ்வளவு இலகுவில் செய்து முடிக்கப்படுவதில்லை.
குறிப்பாக, வீட்டுத் திட்டம், வீதி அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு அவசியமான தேவைகளை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் மந்தப் போக்கிலேயே செய்து முடிக்கப்படும்.
அபிவிருத்தி காணாத தமிழர் பகுதி
சில வீட்டுத் திட்டங்கள் மற்றும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் என்பன பல வருடங்களாக முடிவுறுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதையும், அரைகுறை வேலைப் பாடுகளுடன் பாழடைந்து கிடப்பதையும் கிராமப் புறங்களில் நாங்கள் காணக்கூடும்.
சில இடங்களில் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப, அரசியல்வாதிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப அபிவிருத்தித் திட்டங்கள் முடிவுறுத்தப்படாமல் இருக்கும் நிலையும் அதுவும் தமிழர் பகுதிகளில் அதிகமாக இந்த நிலை உள்ளதையும் காண முடியும்.
இவ்வாறான ஒரு துரதிஷ்ட நிலையிலேயே கிளிநொச்சி - கண்டாவளை பகுதியில் உள்ள புளியம்பொக்கணைச் சந்தி காணப்படுகின்றது.
A35 வீதியின் புளியம்பொக்கனைச் சந்தியில் பரந்தன் பக்கமாக உள்ள பெரிய பாலத்தின் கட்டுமான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தோல்வியில் முடிந்த முயற்சி..
பிரதான போக்குவரத்து வீதியிலுள்ள பாலமாக இது அமைந்துள்ள போதும் ஒருவருடத்திற்கும் அதிகமான காலமாக அதன் கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆபத்தான முறையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக விலகல் பாலம் ஊடாகவே மக்கள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கள் நிகழின் பாலத்திற்குள் விழுவதற்கும் அவ்வாறு விழும் போது பாலத்திற்குள் உள்ள இரும்பு கம்பிகளாலும் பயணிகள் அதிக சேதத்திற்குள்ளாகும் வாய்ப்புகளும் இருக்கின்றது.
அமைக்கப்பட்டுள்ள விலகல் பாலம் ஆபத்துக்கள் நிறைந்ததாகவும் பழுதடைந்தும் காணப்படுகிறது. மாரி மழைக்காலம் தொடங்கவிருக்கும் போது இந்த பாலத்தின் கட்டுமானம் பூர்த்தியாகாதது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என மக்களால் கருத்துக் கூறப்படடது.
பிரதேச செயலகம் கண்டாவளையுடன் இது பற்றிய உரையாடலை மேற்கொள்ள எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |