முல்லைத்தீவு பொதுச் சந்தையின் மோசமான நிலைமை: மக்கள் கண்டும் காணாமலும் இருப்பதேனோ..! (Photos)
முல்லைத்தீவு நகரத்தின் பிரதான பொதுச் சந்தையில் வீட்டு ஈ என அழைக்கப்படும் நோய்க் காவிகள் அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றன. எனினும் பொதுமக்கள் கண்டும் காணாமல் அவற்றின் இடையூறுகளுக்கிடையே தங்கள் வழமையான செயற்பாடுகளில் பரபரப்பாக ஈடுபட்டுக் கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது.
பொது வைத்திய சுகாதார துறையினரும், நகரசபையினரும் இதனை கண்ணுற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் எவற்றையும் இதுவரை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை.
மீன் மேடைகளின் நிலை
மீன் விற்கும் பகுதி, இறைச்சி வகை விற்பனைப் பகுதி, மரக்கறி பழங்கள் விற்கும் பகுதி, பலசரக்கு விற்பனைக் கடைகள் என பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது இந்த சந்தை கட்டடத் தொகுதி.
மீன் விற்பனைப் பகுதியும், இறைச்சி விற்பனைப் பகுதியும் ஈக்களால் மொய்க்கப்பட்டு பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.
வியாபாரம் செய்யும் போது ஈக்களை இலைகளாலான குழைகளால் கலைத்தவாறு இருக்கும் வியாபாரிகள் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எத்தகைய முயற்சிகளையும் எடுக்கவில்லை.
வியாபாரம் முடிந்த மீன் விற்பனை மேடைகளில் ஏராளமான ஈக்கள் (இலையான்) நடமாடுகின்றன. இது பற்றி வியாபாரிகளிடையே உள்ள கருத்து அறிவியல் தன்மையற்றதாக இருக்கிறது.
“என்ன செய்தாலும் இலையானை கட்டுப்படுத்த முடியாது. இலையான் மருந்தும் பயன்படுத்த முடியாது. இது உணவு விற்பனைப் பகுதி. இது கோடைகாலம். பிறகு தானாப் போய்விடும்” என்ற எண்ணம் மேலோங்க வாழ்கின்றனர்.
சிறந்த நோய்க்காவி ஈக்கள்
வீட்டு ஈக்கள் சிறந்த நோய்க்காவிகள். அவற்றால் ஏராளமான நோய்கள் மனிதரிடையே பரவும் என்ற விழிப்புணர்வு சந்தை வியாபாரிகளிடமோ, சந்தைக்கு வருபவர்களிடமோ இருப்பதாக தெரியவில்லை.
நெருப்பு காச்சல், வயிற்றோட்டம், வயிற்றுளைவு, வாந்திபேதி போன்ற ஏராளமான நோய்கள் வீட்டு ஈக்களால் பரப்பப்பட்டு ஏற்படுகின்றன.
இலங்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய நோய்களில் நெருப்புக் காச்சல், வாந்திபேதி (கொலரா) என்பன குறிப்பிடத்தக்கது.
குப்பை வாளிகள்
இதேவேளை சந்தையின் கழிவுகளை சேர்த்து பிரதேச சபையின் கழிவகற்றல் செயற்பாட்டுக்கு உதவுவதற்காக வைக்கப்பட்டது குப்பை வாளிகள். எனினும் இன்று அவை உடைந்தும் அசுத்தமாகவும் காணப்படுகின்றன.
சிலர் கழிவுகளை வாளியின் கீழும் போட்டுச் செல்லுகின்றனர். குப்பை வாளி வைக்கப்பட்ட இடமும் அதன் அருகிலுள்ள சீமெந்துச் சுவரும் அழுக்குகள் படிந்திருப்பது பார்ப்போரை முகம் சுழிக்கச் செய்கின்றது. "செய்வன திருந்தச் செய்" என்ற அழகிய பொன் மொழியை கொண்ட தமிழைப் பேசும் தமிழரிடையே அதனை செயல்படுத்தி வாழும் ஆற்றலை காண்பது அரிதாக இருக்கிறது.
பொதுச் சுகாதார சேவையை நாடுவதில்லை
பொதுச் சந்தையின் சுகாதார நிலைமைகளை முல்லைத்தீவு பிரதேச சுகாதார அதிகாரி (PHI) ஒருவரை தொடர்பு கொண்டு சுட்டிக்காட்டிய போது அவர் பொறுப்பாக பதிலளித்ததுடன், தாங்கள் விரைந்து உரிய செயற்பாடுகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு நகரத்தைச் சுத்தமாகவும் அழகாகவும் பேணுவதில் பொதுச் சந்தையின் அழகும் ஆரோக்கியமும் முக்கியமானது.
மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! உறவினர்களை கடத்திய TMVP (VIDEO)
பொதுமக்கள் பிரதேச சபையினருடனும் பொதுச் சுகாதார அதிகாரிகளோடும் இணைந்து பயணிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கலாம்.
ஆரோக்கியமான சமூகமாக மாற்றமடைந்து பொதுச் சந்தைக்கு செல்லும் இளையவர்களுக்கும் ஏனையோருக்கும் சிறந்த முன்னுதாரணமாக விளங்கலாம்.