தமிழர் பகுதியில் அமைக்கப்படும் கட்டடங்களின் பரிதாப நிலை! வெளிவரும் அதிர்ச்சிப் பின்னணி
வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதிகளில் வீட்டுத்திட்டத்திலுள்ள பல வீடுகள் தொடக்கம் தொழிற்சாலைகள் வரை ஏராளமான கட்டடங்கள் மக்கள் பாவனைக்காக விடப்பட்டு காலப்போக்கில் அவை பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ள கதை நாமறிந்தவையே.
பாரியளவான நிதி செலவிடப்பட்டு மக்களின் பயனுக்காக அமைக்கப்பட்ட இவ்வாறான கட்டடங்கள் காலப்போக்கில் கவனிப்பாரின்றி பற்றைகள் வளர்ந்து இருக்கும் பரிதாப நிலையை ஆங்காங்கே காணமுடிகிறது.
அவற்றின் நிலைமையை ஆராய்ந்து பார்த்தால் அவற்றின் பின்னால் இருக்கும் மெத்தனப்போக்கான பின்னணி நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அந்த வரிசையில் இடம்பிடித்த ஒரு கட்டடம் தான் பழம்பாசி கிராமத்திலுள்ள பழுதடைந்து போன பழச்சங்கக் கட்டடம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலவரம்: யுத்தத்தின் போது கூட இல்லாத நிலை(Photos)
பழுதடைந்து போன பழச்சங்கக் கட்டடம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பழம்பாசி கிராமத்தில் வெள்ளைப்பிள்ளையார் கோவில் சந்தியில் அமைந்துள்ளது பழங்களை பதனிடும் மற்றும் சேமித்து சந்தைப்படுத்தும் கட்டடத்தொகுதி.
பழச்சங்கத்திற்கு சொந்தமான இந்த கட்டடத்தொகுதியும், அதனுள்ளிருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.
தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த இந்த கட்டடம் இப்போது மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.
கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இந்த நிலை தொடர்ந்த போதும் அதனை திருத்தி அதன் வேலையைத் தொடர்ந்து விவசாயிகள் பயனடையும் வகையிலான முயற்சிகள் நடைபெற்றதா என்றால் அது கேள்விக்குறியே.
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் இது தொடர்பில் பேசிய போது, திருத்த வேலைகளுக்கான நிதி கிடைக்காமையால் திருத்த வேலைகளைச் செய்ய முடியவில்லை.
அதனால் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு அதனை பயன்படுத்த முடியவில்லை என குறிப்பிடுகிறார்.
பொது அமைப்புகளின் பொறுப்பற்ற செயல்
தற்போதைய நிலவரம் ஒருபுறம் இருக்க நல்ல நிலையில் இருந்த இந்த கட்டடம் எவ்வாறு பயன்பாடற்ற நிலையில் கைவிடப்பட்டது என்ற விசாரணையில் கிடைத்த செய்தி அதிர்ச்சிகரமானது.
இந்த கட்டடமானது பழச்சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்திருக்கிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த கட்டடத்தையும் அதனுள்ளிருக்கும் பொருட்களையும் பராமரித்த முறை திருப்திகரமானதாக இருந்திருக்கவில்லை என்பதை உரைகின்றன தகவல்கள்.
பொதுச் சொத்துக்கள் என அசமந்தபோக்குடன் நடந்து கொண்ட வரலாறுகளும் இருந்திருக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படை அமைப்பு உறுப்பினர்களுக்கு இவை தொடர்பான போதியளவு அறிவு இருக்கவில்லை என்பதே.
அதனை வளர்த்துக் கொள்ளவும் அவர்கள் முயன்றது மிகக்குறைவாக இருக்கிறது. இவை அனைத்தினதும் மொத்த விளைவு இன்று அந்த கட்டடமும், அதன் பயனும் வீணாகிக் கொண்டிருக்கிறது.
இதேநேரம் அதனுள் இருந்த பயன்பாடுடைய பொருட்கள் காணாமல் போகின்ற அவலமும் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன. இதில் கணினிகளும், அதன் பாகங்களும் கூட அடங்குகின்றமை வேதனையளிக்கும் விடயமாகும்.
தொண்டு நிறுவனங்களை நாடல்
இப்படியானதொரு சூழல் நிலவும் நிலையில் இப்போது தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடி இந்த கட்டடங்களை புனரமைத்து பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், புனரமைப்பின் பின்னர் குத்தகைக்கு விடும் ஒரு புதிய முறை பற்றியும் சிந்திப்பதாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.
பழம்பாசி கிராம விவசாயிகளுக்கு பப்பாசி, கொடித்தோடை பழச்செய்கைகளுக்கான பயிற்சிகளை வழங்கி அவற்றை பயிர் செய்வதற்கான ஊக்குவிப்பினை கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தன தொண்டு நிறுவனங்கள்.
இதனை கொண்டே குறித்த கட்டடத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்காக தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடும் யோசனை செயற்படுத்தப்பட்டு வருகிறது.
எனினும் கூட கிடைக்கும் ஆரம்பகட்ட உதவிகளைக் கொண்டு தங்களை வளர்த்து கொண்டு மற்றவர்களையும் வளர்க்கும் மனநிலை அந்த கிராம மக்களிடம் இல்லை என்றவாறான கருத்தே தற்போது நிலவுகிறது.
இந்த மனநிலை வளர்க்கப்பட்டால் உதவிகளை தொடர்ந்து எதிர்பார்த்து வாழ்வை வறுமையில் ஓட்டிச் செல்லும் துயரம் இருக்காது என்பதே நிதர்சனம்.