ஈழப் போரைத் தாங்கிய மண்ணின் விழுதுகளின் வீரச் செயல்களால் விளையப் போவது என்ன..!
ஈழப்போராட்டத்தில் அமைவிடத்தால் பெறுமதியான பயன்களை அந்த வீரமிகு போராட்டத்திற்கு அள்ளிக் கொடுத்த கிராமம் உடுப்புக்குளம்.
இந்த கிராமத்தின் வலுவாக செயலாற்றும் மண்பற்று கொண்ட மனிதர்களால் ஆன விளையாட்டு கழகம் அலையோசை விளையாட்டு கழகம்.
சாதனைகளின் ஒட்டுமொத்த உருவமாக அலையோசை விளையாட்டுக்கழம் விளங்குகின்றது.
தடைகளை உடைத்து விடைகளை தேடிய இளைஞர்களின் கூட்டம் இந்த கழகம் என்றால் மிகையில்லை.
வளமான விளையாட்டு களம் கொண்ட விளையாட்டு கழகம்
சிறப்பான ஆட்டத்திற்கு உவப்பான விளையாட்டு மைதானத்தை தன்னகத்தே கொண்டது. நான்கு ஏக்கர் நிலத்தை மைதானமாக பராமரித்து வருகின்றனர்.
கடும் சவால்களை எதிர்கொண்டு ஆரம்பம் முதலே விளையாட்டு கழக வீரர்களின் பங்களிப்பினால் இன்றைய நிலையை எட்டிப்பிடித்துள்ளனர்.
இந்த முயற்சி அவர்களது ஒற்றுமைக்கும் கிராம மண் பற்றுக்கும் நல்ல உதாரணமாகும்.
புலம்பெயர்ந்த விளையாட்டு கழக வீரர்களின் பங்களிப்பில் கழகத்திற்கான நிலத்தினை உறுதியாக்கியதோடு மைதானத்தின் சுற்று மதிலையும் வாயிற் கதவினையும் அழகுற அமைத்து வியக்க வைத்திருக்கின்றார்கள்.
மரங்களை நாட்டி மண்ணை காத்தார்கள்
மைதான நிலத்தின் வேலியோரங்களில் நிழல்தரு மரங்களை நாட்டி பராமரித்து வருகின்றனர்.
சவுக்கு, கொண்டால், மலைவேம்பு, ஆகிய மரங்களை நாட்டியுள்ளார்.
மைதானத்திற்கான நிலத்தினை தெரிவு செய்த போது வீதியோரமாக இருந்த வின்னாங்கு மரத்தினை இன்றளவும் பராமரித்து பேணுவதற்கான உயர்ந்த சிந்தை அலையோசை இளையோரிடம் இருந்தது பாராட்டுக்குரியது.
நாட்டிய மரங்கள் உயர்ந்து வளர்ந்து நிழல் கொடுக்கத் தொடங்கி விட்டன. விளையாட்டு வீரர்கள் மற்றும் இரசிகர்களோடு இளைப்பாறும் வேளை அவை கதை பேசுகின்றன.
பொருத்தமான அமைவிடத்தால் பயனதிகம்
ஈழத்தின் இதய பூமியாகிய மணலாற்றுக்கு அண்மையில் இருப்பதால் ஈழப்போராட்ட காலத்தில் பெருமளவில் காப்போடு பயிற்சிகளுக்கு கைகொடுத்த நிலமாவதோடு இப்போது உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்திற்கும், அதிசயவிநாயகர் ஆலயத்திற்கும், குழந்தையேசு தேவாலயத்திற்கும் நடுவே உடுப்புக்குள கிராமத்தினை ஊடறுத்துச் செல்லும் பிரதான பாதைகளில் ஒன்றின் அருகே அமைந்திருப்பதால் பயன்பாடு அதிகமுள்ளது.
எங்கும் இல்லாத விசேட பண்பு
அலையோசை விளையாட்டு கழக மைதானம் பச்சைப் பசேலாக காட்சியளிக்கும். பாடசாலை தன்னுடைய மாணவர்களின் விளையாட்டு பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எப்போதும் அனுமதி மறுக்கப்படுவதில்லை. ஆனாலும் பாடசாலைக்கு மைதானம் சொந்தமாகாது.
பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளுக்கு கழக வீரர்களின் பங்களிப்பு பெருமளவில் கிடைக்கும். இணைந்து பயணிக்கும் சிறந்த பண்பாடு இவர்களது மாற்றப்படாத இயல்பாகும்.
சாதனைகள்
சிறந்த விளையாட்டு வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பெண்களையும் ஒரு அங்கமாக கொண்டு களங்கள் காண்கின்றன.
தேசிய மட்டப் போட்டிகள் வரை முன்னேறி செல்லும் இவர்களுக்கு சிறந்த பயிற்றுவிப்பாளர் கிடைப்பது குறைவாக இருக்கிறது.
அலையோசை விளையாட்டு கழகம் குத்துச்சண்டை, கூடைப்பந்து, வலைப்பந்து, கிராமிய விளையாட்டுக்கள், கராத்தே, உதைபந்தாட்டம், கிரிக்கெட் போன்ற விரிவுபடுத்தப்பட்ட விளையாட்டுகள் பற்றிய இவர்களது பார்வையை உற்று நோக்க வேண்டியது அவசியமாகும்.
இந்த கழக இளைஞர் முயற்சியில் உருவாக்கப்பட்ட கிராம மக்களுக்கு பொது சேவைகளை முன்னெடுப்பதற்கான "உதவும் கரங்கள்" அமைப்பு செயற்படுகிறது.
இளைஞர் போதையால் சீரழிவதைத் தடுத்து தொழில் முயற்சியில் ஈடுபட தூண்டும் சிறப்பு இருப்பதும் வியப்பு. கிராமத்தின் கல்வி நிலையம், பாடசாலை, ஆலயங்கள், பொது அமைப்புகள் எல்லாம் விளையாட்டு கழகததால் ஒருங்கிணைக்கப்படுவதால் சிறந்த சேவைகளை வழங்குவதில் வெற்றி பெறுகின்றார்கள்.
விளையாட்டு கழக செயலாளர் குறிப்பிடும் போது மாகாண உதைபந்தாட்ட அணியில் தங்கள் கழக வீர்களும் பங்கெடுக்கச் செய்வதே அடுத்த இலக்காகும் என்றதுடன் அண்மையில் நடந்த நந்தி சமரில் கிண்ணம் வென்றதாக குறிப்பிட்டார்.
சிறந்த தலைமைத்துவம்
எல்லா கிராம அமைப்புக்களிலும் அங்கம் வகிப்பதால் தன்னால் ஒருமுகப்படுத்தி கிராமத்தின் வளர்ச்சிக்கு இளையவர்களை ஒருங்கிணைக்க முடிவோடு தன்னிலும் மூத்த கிராமத்தின் பெரியவர்கள் தன்னோடு இணைந்து துணையாவதால் முடிந்தளவில் தவறுகளிலிருந்து விலகி சேவையாற்ற முடிவதாக குறிப்பிட்டார்.
அலையோசை விளையாட்டு கழகத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் க.பரமேஸ்வரன் (தீபன்). நான் தேடியதில் புலம்பெயர் கிராம மக்களையும் தாயக கிராமத்தையும் ஒரு நேர்கோட்டில் கொண்டுவருவதில் இவரும் வெற்றிகண்டுள்ளார்.
இவர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அரச பணியில் இருப்பதோடு சமாதான நீதவானாகவும் இருக்கின்றார்.
இந்தளவு இளவயதில் இவ்வளவு ஆளுமையுள்ள தலைமைத்துவம் கிடைத்தது கழகத்தின் வரப்பிரசாதமே!
வழிகாட்டலின் கீழ் ஒற்றுமை பேணி நடைபோடும் அலையோசை விளையாட்டுக்கழகத்தின் இளையவர்கள் நாளை காண்பார் புதிய தேசம் ஒன்றை.