உற்று நோக்க வேண்டிய பொறுப்புணர்ச்சி: தெரிந்தும் நடந்தேறும் அவலம் (Photos)
மிகச்சிறிய தவறுகளே நாளை மிகப்பெரிய சறுக்கல்களை தந்து விடுகின்றன. அத்தகைய ஒரு சிறிய தவறு இலங்கையின் எல்லா பாகங்களிலும் பரவலாக நித்தம் சத்தம் இல்லாது நடந்தேறுகின்றது.
வீதியோரமாக உள்ள மரங்களில் விளம்பர தகவல்களை சுட்டும், அட்டைகளை உலோக அணிகளைக் கொண்டும் பொருத்துகின்றனர்.
போட்டி வியாபார நோக்கம்
நுகர்வோரிடையே தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் தீவிர போக்கு நிறுவனங்களிடையே அதிகரித்து விட்டது.
தங்கள் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரப்படுத்தல் பிரிவினரிடையே ஏனைய போட்டி நிறுவனங்களுடன் போட்டியை ஊக்குவித்து அதிக இலாபம் ஈட்டும் போக்கை வளர்த்தெடுக்கின்றனர்.
ஆனாலும் எல்லா நிறுவனங்களும் ஒரே உபாயத்தையே பின்பற்றுகின்றன. விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தும் உபாயங்கள் சூழல் நேயத்தமையான முறையாக இருக்க வேண்டும் என்பதை நிறுவனங்கள் கருத்திலெடுப்பதில்லை.
சேதமாகும் வீதியோர மரங்களின் தண்டுகள்
வீதியோர தாவரங்களின் தண்டுகளில் உலோக ஆணிகளைக் கொண்டு தங்கள் விளம்பர அட்டைகளை பொருத்துகின்றனர்.
இதனால் வீதியோரங்களிலுள்ள மரங்களின் தண்டுகள் இதனால் அதிகம் சேதமாகின்றன. நாளடைவில் மரத்தின் தண்டில் உள்ள காயங்களை சீர் செய்வதற்காக ஏற்படும் வளர்ச்சியினால் சீரான அழுத்தமான தண்டுகளின் எடுப்பான தோற்றம் உருக்குலைக்கப்படுகின்றது.
இறந்து போகும் தண்டின் பகுதி மரத்தின் உறுதியை பாதிப்பதால் நீண்ட கால நோக்கில் அவற்றை வெட்டுமரங்களாக பயன்படுத்த முடியாது போகும்.
காற்று அனர்த்தங்கள் ஏற்படும் போது அவை இலகுவாக முறிந்து போகும் வாய்ப்புக்களும் ஏற்படும். இயற்கையாக வாழும் தாவரங்களை பேணிப்பாதுகாக்கும் இயல்பை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்துவது நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பான பதில்கள் இல்லை
வீதியோர மரங்களில் ஏற்படுத்தப்படும் உலோக ஆணிச் சேதம் தொடர்பாக பொதுமக்களிடையே தெளிவான பொறுப்பான கருத்துக்கள் இல்லாமை ஆச்சரியமளிக்கிறது.
தாங்கள் நித்தம் பயன்படுத்தும் பாதையின் நிழல் தரும் மரங்களை பாதிக்கும் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற உயரிய பண்பு அவர்களிடையே வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
பொறுப்பான அதிகாரிகளிடையேயும் இது விடயமாக எந்த பொறுப்புணர்சியும் இல்லை. இது தொடர்பாக சுட்டிக்காட்டும் ஆர்வலர்களையும் அவர்களது கருத்துக்களையும் கூட அவர்கள் கருத்திலெடுப்பதில்லை என ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டமையும் குறிப்பிட்டாக வேண்டும்.
மாற்று வழி விளம்பரப்படுத்தல் வேண்டும்
வியாபார நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை வெளிப்படுத்தும் முறைகளில் தாவரங்களில் ஆணி மூலம் பொருத்து முறையைத் தவிர்க்கலாமே! இலகுவில் உக்கும் திறனற்ற கயிறுகளையும் உலோக கம்பிகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அபிவிருத்தியின் போது ஏற்படும் தாவரங்களின் இழப்புக்களுக்கு மத்தியில் எஞ்சியுள்ள ஏனைய தாவரங்களை நலமாக பேணி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
எடுத்துரைத்தும் கேட்பாரில்லை
வீதியில் நிழல் மரங்களை தறிப்பதையும் அவற்றை சேதப்படுத்துவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தியும் அதனை பொருட்படுத்தாது, கவலையளிப்பதாக மட்டும் குறிப்பிடும் சமூக நலன்விரும்பிகள் படித்தவர்கள் புரிந்து கொள்வதில்லை எனவும் விசனப்படுகின்றனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலவரம்: யுத்தத்தின் போது கூட இல்லாத நிலை(Photos)
நிறுவனங்களும் பிரதேச சபையினரும் கூட வீதியோர மரங்களில் விளம்பரப்படுத்தல் செய்வதனை தடுப்பதில் அக்கறையற்று இருக்கின்றனர் என்பதை அவதானிக்க முடிந்தது.
இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் போது பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளும் அதிகாரிகள் மிகச் சிலரே உண்டு என்பதும் இதனையொட்டி கவலைப்பட வேண்டியதொன்றாக அமைகிறது.