இலங்கையில் நங்கூரமிடப்பட்ட கப்பல்! அடுத்த சில மணித்தியாலங்களில் சீனாவின் எச்சரிக்கை - இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை
கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலை மையப்படுத்திய சர்ச்சைகள் வலம் வருவதை பரவலாக அறிய முடிகிறது.
ஒரு பக்கம் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் - 5 இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதை தடுக்குமாறு இந்திய தரப்பிலிருந்து வந்த அழுத்தம், எனினும் மறு பக்கம் கப்பலை அனுப்பியே தீருவதாக சீனாவின் பிடிவாதம்.
எனினும் ஒருவழியாக சீன கப்பலானது இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து விட்டது. இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்பதே கேள்வியாக இருக்கிறது.
இலங்கையின் அவசர காலங்களில் தயக்கமின்றி உடனடியாக கை கொடுக்கும் நாடான இந்தியா, இதேவேளை அடுத்த பக்கம் இலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து பொருளாதார ரீதியில் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும் சீனா.
கப்பல் இலங்கைக்கு வருவதற்கு முன்பாக இருந்தே ஆரம்பித்த சர்ச்சை அலைகள் இன்னும் அடங்கியதாக இல்லை.
கப்பலின் வருகை மற்றும் அதனை தடுப்பது தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் இலங்கையை என்ன முடிவெடுப்பது என்று தெரியாத நிர்ப்பந்த நிலைக்கு தள்ளியிருந்தமையையும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.
யுவான் வாங் - 5இற்கு இலங்கை விதித்த கட்டுப்பாடு
இதேவேளை யுவான் வாங் - 5 கப்பலானது இலங்கை கடற்பரப்பில் இருக்கும் போது அதன் தானியங்கி அடையாள அமைப்பை (AIS) செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், இதனால் ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதிக்கு இடையில் எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக மட்டுமே கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
என்றபோதும் இந்த கப்பல் உளவு நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் இந்தியாவிற்கு காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் இந்தியாவால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படும் போதும் இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற சந்தேகத்தை தெளிவுப்படுத்துவதை இந்திய வெளியுறவுத்துறை பெரும்பாலும் தவிர்ப்பதையே அவதானிக்க முடிவதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கைக்குள் சீனா நுழைந்துள்ளதாகவும் அதன் அங்கமாகவே தனது கப்பலை அந்நாடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கப்பல் நங்கூரமிடப்பட்டவுடன் சீனா விடுத்த எச்சரிக்கை
இதேநேரத்தில் தமது உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலின் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது என நேற்று அதாவது கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட பின்னர் சீனா வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் தடையாக இருக்கக் கூடாது எனவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெங் வென்பின் (Wang Wenbin) எச்சரித்துள்ளார்.
அத்துடன், “யுவான் வாங் - 5 கப்பல், இலங்கையின் தீவிர ஒத்துழைப்புடன், இந்தியா - அமெரிக்காவின் கவலைகளுக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது. யுவான் வாங் - 5 கப்பலின் கடல் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு இசைவானவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
இது வழக்கமான சர்வதேச நடைமுறையாகும். அவை எந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை பாதிக்காது. இது எந்தவொரு மூன்றாம் தரப்பினராலும் தடுக்கப்படக்கூடாது. சில நாடுகள் கொழும்பிற்கு அழுத்தம் கொடுப்பதும், அதன் உள் விவகாரங்களில் மொத்தமாக தலையிடுவதும், பாதுகாப்புக் கவலைகள் என்று கூறுவதும் முற்றிலும் நியாயமற்றது” என்றும் அவர் அழுத்தமாக சீனாவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை இந்த கப்பல் தொடர்பான சர்ச்சை ஆரம்பித்த நேரத்திலும் கூட இலங்கை இறையாண்மை கொண்ட நாடாக இருப்பதால், தேவையான வெளிநாட்டு உறவுகளைப் பேண அனுமதிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியிருந்தது.
அதேபோன்று இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் மூன்றாம் தரப்பினர் தலையிட வேண்டிய அவசியமில்லை எனவும் சீனா சுட்டிக்காட்டியிருந்தது.
யுவான் வாங் - 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதை தாமதப்படுத்துமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் சீனா இதனைத் தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
பாதுகாப்பை பலப்படுத்தும் இந்தியா
இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு மத்தியில் சீன ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளமை இந்தியாவை எந்தளவு பாதித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தமிழகம் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தகவல்களின் படி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடிஉள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானங்கள், 3 உலங்குவானூர்திகள் உள்ளிட்டவை இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது இப்படியிருக்க இந்த சம்பவம் இந்தியா தரப்பிலிருந்து இலங்கைக்கு எவ்விதமான பாதக விளைவுகளை தர காத்திருக்கிறது என்பது முற்றிலும் புலப்படாத மர்மமாகவே இருக்கிறது.
சீன கப்பலின் வருகை இந்தியாவிற்கு பெரியளவான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த சூழல் இலங்கைக்கும் இந்தியாவிற்குமான உறவை எந்த வகையில் பாதிக்க காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டிய அதேவேளை இந்தியாவும் சீனாவை போன்றே இலங்கையை நிர்ப்பந்திக்கும் வகையில் தமது காய்களை நகர்த்துமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.