சீன கப்பல் வருகையின் பின் அனைத்து பார்வையும் இலங்கை மீது:மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றோம் - எஸ்.ஜெய்சங்கர்
இலங்கையில் நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மிக மிக கவனமாக அவதானித்து வருகின்றோம்
எமது அயல் நாடான இலங்கையில் நடப்பவை, இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் எந்த வளர்ச்சியாக இருந்தாலும் நாங்கள் மிக மிக கவனமாக அவதானித்து வருகின்றோம் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் கண்காணிப்பை அதிகரித்துள்ள இந்தியா
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், பதில் நடவடிக்கையாக இந்தியா ராமேஸ்வரம் பகுதியில் தனது கடற்படையினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன் கண்காணிப்புகளையும் அதிகரித்துள்ளது.
மேலும் இந்திய கடற்படையின் உலங்குவானூர்திகள் இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள இந்தியாவின் தென் பகுதி கடல் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பொலஸ்டின் ஏவுகணை, விண்வெளி கண்காணிப்புக்கான சக்தி வாய்ந்த அன்டனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் இலங்கை கடந்த 2018 ஆம் ஆண்டு விடுத்த கோரிக்கைக்கு அமைய கடல் கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்த உதவும் வகையில் டோனியர் உளவு விமானத்தை இலங்கைக்கு கடந்த 15 ஆம் திகதி வழங்கியது.
22 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும் யுவான் வாங் 5 கப்பல்
சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்ததுடன் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிடப்படவிருந்தது.
எனினும் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் கோரியிருந்தது. எனினும் அதற்கான காரணங்கள் எதனையும் வெளிவிவகார அமைச்சு முன்வைக்கவில்லை.
இவ்வாறான நிலையில், தனது முடிவை மாற்றிக்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சு கப்பலுக்கு ராஜதந்திர அனுமதியை வழங்க தீர்மானித்தது.
இதனடிப்படையில் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீன கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி அவரை அங்கு நங்கூரமிட்டிருக்கும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை இலங்கை இரண்டு சந்தர்ப்பங்களில் எடுத்த இந்த தீர்மானத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வந்தது.
சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முயற்சி என இந்தியா கருதுகிறது.