அதிநவீன தொழிநுட்பங்களுடன் கூடிய யுவான் வாங் கப்பல்! இந்தியாவை இலக்கு வைக்கிறதா சீனா..
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மற்றுமொரு தலையிடியாக சீன கப்பல் உருவாகியுள்ளது.
பொருளாார நெருக்கடிகளால் எழுந்த போராட்டங்களின் சூடு சற்றே தணிந்துள்ள நிலையில் இலங்கைக்கு வரும் சீன கப்பலினால் இலங்கையின் கள நிலவரம் மற்றுமொரு பரபரப்பான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதோடு, பல சர்ச்சைகளையும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தியா மற்றும் சீனாவை உள்ளடக்கிய புவிசார், பிராந்திய அரசியலில் இந்த விவகாரம் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவின் கவலை
ஹம்பாந்தோட்டைக்கு வரும் யுவான் வாங் 5 என்ற இந்த சீனக்கப்பல் தொடர்பில் இந்தியா தனது கடும் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மிக உறுதுணையாக இருந்து சரியான நேரங்களில் பல உதவிகளை இலங்கைக்கு இந்தியா வழங்கி வந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் சீன கப்பல் இலங்கைக்கு வருவதை தவிர்க்கவும் முடியாமல், இந்தியாவிற்கு பதில் சொல்ல முடியாமலும் இலங்கை தத்தளித்து வருகின்றது.
கடந்த சில வருடங்களாக கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு சீன விஞ்ஞான ஆராய்ச்சிக் கப்பல்கள் பலவற்றை இலங்கை அனுமதித்துள்ளது, ஆனால் அது சர்ச்சையை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன அரசுக்கு சொந்தமான கப்பலின் விஜயம், துறைமுகத்தை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது என்ற ஊகத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இந்த கப்பல் வருகைக்கு கடந்த கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்ததாக கூறப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாகவே இந்த கப்பல் விவகாரம் பார்க்கப்படுகின்றது.
இந்தக் கப்பல் விவகாரமானது இந்தியாவும் சீனாவும் மட்டும் மோதிக் கொள்கின்ற ஒரு பிராந்திய அரசியல் விவகாரமாக மட்டும் பார்க்கப்படக் கூடாது. மாறாக, இலங்கையின் அரசியல், பொருளாதார பிரச்சினையின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் கப்பல் என சீனா கூறினாலும், இதை ஓர் உளவுக் கப்பலாகவே இந்தியா பார்க்கின்றது. இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும், அதாவது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தவாறு, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்க கூடும் என இந்தியா கவலை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தியாவின் தென்கோடி கேந்திர கடலோர பாதுகாப்பு அமைப்புகள், தாக்குதல் வியூகங்கள் போன்ற தகவல்களை துல்லியமாக சீன செயற்கைக்கோள் கப்பலால் பதிவு செய்ய முடியும் எனவும் கூறப்படுகின்றது.
ஆய்வுக் கப்பலா அல்லது உளவுக் கப்பலா..
யுவான் வாங் 5 என்ற இந்த கப்பல் 2007ஆம் ஆண்டு சீனாவின் ஜியாங்கனன் கப்பல் நிர்மாண தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல் என்று கூறப்படுகின்றது.
222 மீட்டர் நீளமும், 25.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 11000 MT மெற்றிக் தொன் எடையுடைய பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
சீனா இதனை Long March-5B ரொக்கெட்டை ஏவுவதற்கான கடல் சார் கண்காணிப்பு மற்றும் அளவீட்டு பணிக்கென பயன்படுத்திவருகின்றது.
சீனாவின் இந்த கப்பல் ஆராய்ச்சி கப்பல் என அடையாளப்படுத்தப்பட்டாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பெலஸ்டி ஏவுகணை மற்றும் செய்திமதிகளை ஏவுதல், கண்காணித்தல் ஆகிய வசதிகள் இருப்பதன் காரணமாக தமது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் என இந்திய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அதி நவீன கண்காணிப்பு தொழில்நுட்பம்
இந்த நிலையில், யுவான் வாங்-5 கப்பல் சீனாவின் புதிய தலைமுறை விண்வெளியை பின் தொடர்ந்து கண்காணிக்கும் கப்பல் என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் விபரித்துள்ளனர். அத்துடன் இந்த கப்பல், சீனா மக்கள் விடுதலை இராணுவத்தின் மூலோபாய உதவி படைப்பிரிவால் கையாளப்படுவதாக சீனாவின் தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் கப்பல் அதன் மூலோபாய ஆதரவுப் படை (SSF) பிரிவின் கீழ் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) கட்டுப்பாட்டில் உள்ளது. SSF விண்வெளி, இணையம் மற்றும் மின்னணுப் போர் ஆகியவற்றில் இது கவனம் செலுத்துவதாக கூறப்படுகின்றது.
இது யுவான் வாங் என்ற கப்பல் தொடரின் மூன்றாம் தலைமுறை கண்காணிப்பு கப்பலாகும், இது செப்டம்பர் 29, 2007 அன்று சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது மற்றும் சீனாவின் 708 ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.
ஏவுகணைகள் மற்றும் ரொக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆண்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன ஏவுகணை வீச்சு கருவிக் கப்பலாகவும் இது காணப்படுகின்றது.
இவ்வாறான கப்பல்கள் சீனா, பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகளால் முக்கியமாக இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்கள் முழுவதும் இயங்கும் திறன் கொண்ட இந்த கண்காணிப்பு கப்பல்களில் சுமார் ஏழு கப்பல்கள் சீனாவிடம் உள்ளது.
222-மீட்டர் நீளமும் 25.2-மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் கடல்கடந்த வான்வெளி கண்காணிப்புக்கான அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பம் உள்ளது.
சீனாவின் ‘லாங் மார்ச் 5 பி’ ராக்கெட்டை ஏவுவதுதான் அதன் கடைசி கண்காணிப்பு பணி. இது சமீபத்தில் சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தின் முதல் ஆய்வக தொகுதியின் ஏவுதலின் கடல் கண்காணிப்பிலும் ஈடுபட்டது.
அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவின் ஆய்வுகளின் படி இந்தக் கப்பலானது, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் உத்திகளை முன்னெடுப்பதாக உள்ளதோடு, சைபர், மின்னணு, தகவல், தகவல் தொடர்பு, உளவியல் போர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் அச்சம்
இதன் காரணமாகத் தான், ஹம்பாந்தோட்டைக்கு வருகை தரும் 'யுவான் வாங் 5' கப்பல் தொடர்பில் இந்தியாவும் அதீதமான கரிசனையைக் கொண்டு, குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.
ஏனென்றால், 750கிலோமீட்டர் சுற்றளவில் வான்வழி கண்காணிப்பை நடத்தும் திறனைக் கொண்டிருக்கும் குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிட்டாலோ, அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் தரித்து நின்றாலோ அது நிச்சயமாக இந்தியாவின் தென்பிராந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேராள ஆகியவற்றை 'உளவு' பார்க்கும் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது.
குறிப்பாக, கூடங்குளம் மின்நிலையம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள்;, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்கள், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள இந்தியப்படைகளின் தளங்கள், கேராளவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை சீனா இலக்கு வைக்கலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது.
இதனைவிடவும், குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டையில் தரித்துச் சென்றால் அதன்பின்னர் சீனாவின் இதர நவீன போர்க்கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை அடைவதை இலங்கையால் மறுதலிக்கமுடியாத சூழல் தோற்றம் பெற்றுவிடும் எனவும் அவ்வாறான நிலைமையானது, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனா, தனது கடற்படை தளமாக பயன்படுத்துவதற்கு ஏதுவான நிலைமைகளை உருவாக்கிவிடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியப் பெருங்கடலில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரிவான கடற்படையின் நடவடிக்கைகளுக்கு தேவையான தரவுகளைச் சேகரிப்பதற்காகவே சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் இந்து சமுத்திரத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இந்தியா ஏற்கனவே குற்றம் சுமத்தியுள்ளது.
தற்போது சீனாவின் நவீன வகை ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 ஹம்பாந்தோட்டையில் ஒரு வாரத்திற்குத் தங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில், அதைச்சுற்றியுள்ள கடலை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அக்கப்பல், மறைமுகமாக அரபிக்கடல், இந்தியாவின் மேற்குக் கடற்கரைகள் மற்றும் மாலைத்தீவுகள் மற்றும் இந்தியாவின் லாக்காடிவ் தீவுகளைச் சுற்றியுள்ள கடல்களில் ஆய்வுப் பணிகளைத் தொடரவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தான் இந்தியா தனது தேசிய பாதுகாப்பு தொடர்பில் கவலை கொண்டுள்ளது..