மாதாந்தம் 3,000 ரூபா வசூலிப்பதை நிறுத்தவும்: அமைச்சர் பரிந்துரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் கீழ் 50,000 வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தில், வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் போது வீட்டு உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய நொத்தாரிசு கட்டணம், முத்திரைக் கட்டணம் மற்றும் பிற வரிகளுக்கு செலவிடப்படும் தொகை திறைசேரியால் ஏற்கப்படும் என்று பரிந்துரைத்துள்ளது.
வீட்டுரிமை
மேலும், இந்த வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், அந்த வீட்டில் தற்போது வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு மட்டுமே வீடுகளின் முழு உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் அவதானிப்புகளுக்காகவே இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், நாளை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அவதானிப்புகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
பல்வேறு நகர திட்டங்களின் கீழ் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்படும் வீடுகளில் இருந்து மாதந்தோறும் ரூ.3,000 வசூலிக்கப்படுகிறது.
வாடகைப்பணம் வசூலிப்பு
வாடகைப் பணம் வசூலிப்பதை முற்றாக நிறுத்துவதற்கு இந்த அமைச்சரவைப் பத்திரம் முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுமார் 70 வீதமான மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைப்பத்திரங்களை சட்டரீதியாக வழங்கி காணி மற்றும் வீடுகளின் வாரிசுகளாக்குவது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |