சஜித் தலைமையிலான கூட்டங்களை புறக்கணிக்கும் சிறீதரன் எம்பி..
தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாமர சம்பத் தசநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக எந்தவொரு விளக்கமோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறிப்பிட்டுள்ளார்.
அக்குற்றச்சாட்டுகள் மீளப்பெறப்படும் வரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு கூட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் உள்ள சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இடம்பெறும் கூட்டங்களில் தான் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்துவதாக சிறீதரன் எம்.பி. தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றொரு உறுப்பினரும் தன் மீது முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இதுவரை எந்தவொரு கண்டனத்தையோ விளக்கத்தையோ வெளியிடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, கடந்த 2025 ஒக்டோபர் 23 அன்று புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அரசமைப்புச் சபையின் உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தனக்கு எதிரான முறைப்பாட்டை மறைக்க முயன்றார் என்றும், 'நலன்சார் முரண்பாட்டை' ஏற்படுத்திச் சிறப்புரிமைகளை மீறினார் என்றும் நாடாளுமன்றத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள சக உறுப்பினர்கள் தன் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைத்த இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் உடனடியாக மீளப்பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்த வேண்டும் என்றும் சிறீதரன் எம்.பி. அந்தக் கடிதத்தில் கோரியுள்ளார்.
அத்தகைய நியாயமான சந்தர்ப்பம் ஏற்படும் வரை அல்லது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை, எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் எத்தகைய கூட்டங்களிலும் தாம் இனிப்பங்கேற்கப் போவதில்லை என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri