புனித நகரில் தேரரின் காவியுடையை தேரர்களே பறித்து வீசிய பேய்க்கூத்து: கஸ்ஸப்ப குழுவினர் அதிரடி கைது..!
புதிய இணைப்பு
நீதிமன்ற அழைப்பாணையை மீறி, அநுராதபுரம் புனித நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவினர், போராட்டக்களத்திலிருந்து பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து அநுராதபுரம் புனித நகரில் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவினர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டக்களத்தில் இன்று கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது, போராட்டக்களத்திற்கு சென்றிருந்த மற்றுமொரு தேரரான ராஜாங்கணைய சத்தாரதன தேரரின் காவியுடை, போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களால் பலவந்தமாக பறித்து இழுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது.
இலங்கையில் கடந்த காலங்களில் பௌத்த தேரர்களின் காவியுடை, அதன் புனிதம், பௌத்த சாசனம் என்று பலக்கட்ட பிரச்சினைகளை, இன்று காவியுடையை பறித்து வீசிய இதே தேரர் குழுவினர் ஏற்படுத்தியிருந்தனர் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
கேள்விக்குறியாகும் பௌத்தத்தின் புனிதம்
தற்போது, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கஸ்ஸப்ப தேரரின் பிரதான இரண்டு கோரிக்கைகள் இங்கு முக்கியம் வாய்ந்தது.
அநுராதபுரம் புனித நகரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளை இடைநிறுத்துமாறும், இந்தப் பணிகள் காரணமாக குறித்த இடத்தின் புனிதத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தும், அதே சமயம், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரியும் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மேலும் இரண்டு தேரர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், அநுராதபுரம் புனித நகரின் புனிதத்துவத்தை பாதுகாக்க எனது உயிரையே கொடுப்பேன் என்றும், சிறைக்குச் செல்ல தயங்கவில்லை என்றும், மரணத்தை ஏற்க முன்வந்துவிட்டதாக கஸ்ஸப்ப தேரர் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இன்று அதே புனித நகரில், அதே கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினரால் மற்றுமொரு பௌத்த தேரரின் புனித காவியுடை களையப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றது. இங்கு புனிதத்துவமும், பௌத்தமும் எவ்விதத்தில் காப்பாற்றப்பட்டது என்பது கேள்விக்குறி.
அதேசமயம், கஸ்ஸப்ப தேரரின் இரண்டாவது கோரிக்கை, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதாகும்.
கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்புக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காலத்தில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், தற்போதைய ஆட்சிக் காலத்தில், அவருடைய பொதுமன்னிப்பு இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் தனது எஞ்சிய சிறைத் தண்டனைக் காலத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு மீண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது, சிறைச்சாலை விதிமுறைகளின் படி அவருக்கு காவியுடை களையப்பட்டு, சிறைக் கைதிக்கான உடை வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் அரசியல் ரீதியாக ஆளும் அநுர அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்துவதாக அமைந்தது.
இன்று பௌத்தத்தின் புனிதத் தன்மைக்காக போராடும் இதே கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர், ஞானசாரரின் காவியுடை களையப்பட்டதற்காக பெரும் போராட்டங்களை நடத்தி, அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து, ஞானசாரருக்கு விடுதலை வழங்குமாறு கோரி நடைபயணம் மேற்கொண்டனர்.
ஞானசாரரின் காவியுடை விவகாரத்தில் அரசாங்கம், மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி சாதகமான முடிவை அறிவித்து, நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது, காவியுடையுடன் ஞானசாரரை அழைத்து வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னரும் கூட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்டோர், விகாரமகா தேவி பூங்காவிற்கு சென்று அமர்ந்துகொண்டு போராட்டம் என தெரிவித்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.
கிங்ஸ்பெரி ஹோட்டலுக்குள் முகத்தை மூடிக் கொண்டுச் சென்று, பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரைப் பார்வையிட்டு கலந்துரையாடலில் ஈடுபட்ட விவகாரத்தில் கையும் களவுமாக அகப்பட்ட பின்னரும் கூட உடல்நிலை சீரற்றதால் சென்றேன் என சமாளித்து பௌத்த தர்மம் பேசியவர்தான் இந்த கஸ்ஸப்ப.

அத்துடன், அநுராதபுரத்தில் போராட்டத்தை ஆரம்பித்த பின்னர் தமக்கு மகா சங்கத்தினர் ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிவித்து, மகாநாயக்க தேரர்களையும் கடுமையாக கஸ்ஸப்ப விமர்சித்திருந்தார்.
இதேவேளை, திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட விவகாரத்தில், நேற்றையதினம் கஸ்ஸப்பவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும் தனது விமர்சனத்தை அவர் வெளியிட்டார்.
மேலும், தான் பௌத்த தாய்க்கு பிறந்த பௌத்த மகன், சிங்கள இரத்தம், யாராகவிருந்தாலும் அநுராதபுரத்திற்கு வாருங்கள் எம்மோடு வாதிடுங்கள் என நேற்று கஸ்ஸப்ப தேரர் அறைகூவல் விடுத்தார்.
இப்படியான பின்னணியில், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வரவேற்கும், ராஜாங்கணைய சத்தாரதன தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று அநுராதபுரத்திற்கு சென்றிருந்த போது, அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ராஜாங்கணைய தேரரின் காவியுடையை களைந்து அவமானப்படுத்தியுள்ளனர் இந்த கஸ்ஸப்ப குழுவினர்.
தான் ஒரு பௌத்த தாயின் வயிற்றில் பிறந்த பௌத்த மகன் எனக் கூறிக்கொள்ளும் கஸ்ஸப்ப, ஒரு புனித பூமியில் தன் சக பௌத்த தேரருக்கு இளைத்த இந்த அவமானம் எந்த வகையில் பௌத்தத்தைப் போற்றும் புனிதத் தன்மைக்குள் உள்ளடங்கும் என்பது மக்கள் தீர்மானிக்க வேண்டிய ஒன்று.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 12 November, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri
ராஜிவ்காந்தியின் மரணத்தை 2 மாதங்களுக்கு முன்பே கணித்த ராகுல் - சோனியா காந்தி பகிர்ந்த தகவல் News Lankasri