மோசமடையும் வானிலை! வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் சிறு வெள்ள நிலைக்கு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் தலைமை மேலாண்மைப் பொறியாளர் எல். எஸ். சூர்யபண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழையானது, ஜின் கங்கை மற்றும் நீல்வல கங்கைன் மேல் பகுதிகளில் 100 முதல் 120 மில்லிமீட்டர் வரை பதிவாகியுள்ளது.
சிறிய வெள்ள அபாய நிலை
நில்வள கங்கை: அக்குரஸ்ஸ மற்றும் அதனை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகள் சிறிய வெள்ள அபாய நிலையை நெருங்கியுள்ள போதிலும், பெரியளவிலான அதிகரிப்பைக் காட்டவில்லை என தெரிவித்துள்ளது.

கிங் கங்கை: பத்தேகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலை காணப்பட்டாலும், பெரிய வெள்ளமாக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை.
களு கங்கை: மாகுரு மற்றும் மில்லகந்த பகுதிகளில் நீர்மட்டம் சிறிய அளவிலான வெள்ள நிலையை எட்டியுள்ளது.
களனி கங்கை: சாதாரண நீர்மட்டம் உயர்வைக் காட்டினாலும், வெள்ள நிலை வரை அதிகரிக்கவில்லை என கூறப்படுகிறது.
அத்தனகலு ஓயா: கம்பஹா, தூனமல மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளநிலை காணப்படுகிறது.
மஹா ஓயா: நீர்மட்டத்தில் சாதாரண உயர்வு பதிவாகியுள்ளபோதிலும், வெள்ள அபாயம் இல்லை என தெரிவித்துள்ளது.
விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை
மேலும், பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளமையினால், குறுகிய காலத்தில் பெய்யும் அதிக மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளும் வீதிகளும் திடீரென நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது.
எனவே, கங்கைகள் மற்றும் ஆறுகளை அண்மித்து வாழும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆறுகளைப் பயன்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நீர்ப்பாசனத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.