சவுதி அரேபியாவின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு
சவுதி அரேபியாவில் இலங்கைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவிற்கு எதிரான வழக்குகள் அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
முன்னதாக அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த ஒக்டோபர் 13ம் திகதி சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், வழக்கைப் மறுவிசாரணைக்கு அனுப்ப உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் பொது வழக்குரைஞர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் வழக்கு முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த அனைத்து தண்டனைகளும் ரத்து செய்யப்பட்டு செல்லுபடியற்றதாக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்றைய தினம் அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துள்ளார்.
வழக்கின் முடிவு குறித்தும், அனோஜன் விரைவில் இலங்கை திரும்புவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்தும் அவர் குடும்பத்தினருக்கு விளக்கினார்.
இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அதிகாரிகளுக்கு இலங்கை அரசு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
மேலும் ரியாத் நகருக்கு நேரடியாகப் பயணம் மேற்கொண்டு சட்டப் பணிகளை மேற்கொண்ட இலங்கைச் சட்ட நிபுணர்கள் மற்றும் இலங்கைத் தூதரகத்தின் ராஜதந்திர முயற்சிகளுக்கும் வெளியுறவு அமைச்சு பாராட்டு தெரிவித்துள்ளது.
அனோஜனை விரைவாக தாய்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான எஞ்சிய நிர்வாக நடைமுறைகளை பூர்த்தி செய்வதற்காக தற்போது சவுதி அதிகாரிகளுடன் இணைந்து வெளிவிவகார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.