நான் மதிய உணவு உண்ண மாட்டேன்.. அரச அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்
அரச உத்தியோகத்தர்கள் தங்களது தற்போதைய அரிசி மற்றும் மாப்பொருள் நுகர்வை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என விவசாயம், காணி, நீர்ப்பாசன மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "நான் உட்பட இங்குள்ள அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரம் உள்ளது. உங்களது முகம், உடைகள் மற்றும் தோற்றத்தைப் பார்க்கும் போதே அதனை அறிய முடிகிறது.
No lunch..
ஆனால், விவசாயிகளின் கூட்டமொன்றைக் கூட்டினால், அவர்களின் முகம், தலைமுடி, உடைகள் மற்றும் உடலமைப்பு ஆகியவற்றில் வறுமையையே காண முடிகின்றது. விவசாயிகளின் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டுமானால், நாம் வணிக விவசாயத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

இரண்டு ஹெக்டர் நிலம் வைத்திருப்பவர்கள், அதில் ஒன்றில் மாத்திரம் பயிரிட்டு மற்றையதை வெறுமனே வைத்திருக்கும் மனநிலையை மாற்ற வேண்டும்.
மா, வாழை, பலா ஆகியவை ஏற்றுமதிப் பயிர்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை, இங்குள்ள அனைவருக்கும் இப்போது பசியாக இருக்கும், ஆனால் எனக்குப் பசியில்லை.
ஏனெனில் நான் மதிய உணவு உண்பதில்லை. விவசாய அமைச்சர் என்ற ரீதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். அரச ஊழியர்கள் தங்களது தற்போதைய அரிசி நுகர்வை மூன்றில் இரண்டு பங்காகக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
அரிசி நுகர்வு
நாம் மூன்று வேளையும் அரிசி அல்லது மாப்பொருள் சார்ந்த உணவுகளையே அதிகம் உட்கொள்கிறோம். அரிசியைக் குறைத்துவிட்டுப் பாண் (கோதுமை மா) உண்பதை நான் குறிப்பிடவில்லை.

மாப்பொருள் உணவுகளின் அளவை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஆளுநரிலிருந்தே இதனை ஆரம்பிக்க முடிந்தால் அது மிகவும் முக்கியமானது.
ஆளுநர் ஏற்கனவே அதனைக் குறைத்துள்ளார் என்பதை நான் காண்கிறேன். நீங்கள் எடுக்கும் இந்த நடவடிக்கை எமது விவசாயத் துறைக்கு வழங்கும் மிகப்பெரிய தேசிய உதவியாக அமையும்" என குறிப்பிட்டுள்ளார்.