ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் அச்சுறுத்தல் - 105 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்
கொல்கத்தாவிலிருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தல் அச்சுறுத்தல் செய்தி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவம் இன்று(11.11.2026) முற்பகல் 10.30 மணியளவில், விமானம் புறப்படத் தயாராக இருந்தபோது, விமானத்தின் கழிவறைக் கண்ணாடியில் லிப்ஸ்டிக் மூலம் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்த கடத்தல் எச்சரிக்கையை பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விமானம் இடைநிறுத்தம்
இதனையடுத்து பாதுகாப்பு நடைமுறைகளுக்கமைய விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அதிலிருந்த 105 பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினர், தீயணைப்புப் பிரிவினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவினர் இணைந்து விமானத்தையும் பயணிகளின் பொதிகளையும் சோதனையிட்டுள்ளனர்.
பிற்பகல் 1.30 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.