5000 மில்லியன் ரூபாய் கூட்டுறவு நிதி மோசடி.. விடுக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
மாத்தறை மாவட்ட பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 5,000 மில்லியன் ரூபாய் நிதி மோசடி தொடர்பில், சந்தேகநபர் சமிந்த குணசேகர என்பவரால் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் 12 வாகனங்களை பயன்படுத்த எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி வரை மாத்தறை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
குறித்த வாகனங்களை, குற்றப்புலனாய்வு துறையினர் ஏற்கனவே கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நான்கு மணிநேரம் வாக்குமூலம்
இதற்கிடையில், மாத்தறை மாவட்ட பல்நோக்கு கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவர் சமிந்த குணசேகரவின் வாகனம் ஒன்றை பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, நேற்று சிஐடியில் சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன், இந்த மோசடியுடன் தொடர்புடையவராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் தலைமை ஆய்வாளர் வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவும், சந்தேகநபருக்குச் சொந்தமான வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.