கஸ்ஸப்பவை கைது செய்ய உத்தரவு! முதுகு வலி என்பதால் நீதிமன்றம் செல்லவில்லையாம்..
பொலிஸார் எங்களை தாங்கியதால் எமக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை வைத்துக் கொண்டு திருகோணமலை நீதிமன்றத்திற்கு எப்படிச் செல்வது என பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருகோணலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக புத்தர் சிலை ஒன்றை வைக்க முற்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் 2ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கஸ்ஸப்ப தேரர், வழக்கு விசாரணைகளுக்கு இன்றையதினம் முன்னிலையாகாத நிலையில் அவரைக் கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எம்மை பயமுறுத்த முடியாது
அதேசமயம், அநுராதபுர புனித தல அபிவிருத்தித் திட்டம் இடைநிறுத்தப்படவும், ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் அநுராதபுரத்தில் இன்றையதினம் முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில் உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கஸ்ஸப்ப தேரர்,

“பொலிஸார் எங்களைத் தாக்கினார்கள், எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. கை, கால்கள் வலிக்கின்றன. வைத்தியசாலைக்குச் சென்றால் எங்களை கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள். அதனால் சிங்கள மருத்துவ முறையில் சிகிக்சைப் பெற்றுக்கொண்டோம். இங்கிருந்து நடந்து செலலக் கூட முடியாத அளவிற்கு உடல் மிகவும் சோர்வாக இருக்கின்றது. இதில், திருகோணமலைக்குச் செல்வது எப்படி? மிகவும் சிரமமாக உள்ளது.
முதுகு வலிக்கின்றது. இதைப் பார்த்தல் தெரியவில்லையா? பொலிஸார் தாக்கிய காயங்கள் பல நாட்கள் கடந்தும் இன்னும் வலிக்கின்றன. அதன் பின்னர் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கத் தவறிய அரசாங்கத்திற்கு எதிராக நாம் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தோம். தண்ணீர்கூட அருந்தவில்லை. நேற்று மதிய உணவு அருந்திய பின்னர் உண்ணாவிரதத்தை நாங்கள் ஆரம்பித்தோம்.
எனவே, நாங்கள் சட்டவாகத்திற்கு பயப்படவில்லை. நிறைவேற்று அதிகாரத்திற்கும் பயப்படவில்லை. நீதித்துறைக்கும் பயப்படவில்லை. மரணத்திற்கே பயப்படாத எங்களை இதற்காகவெல்லாம் பயமுறுத்த முடியுமா. எங்களை சிறையிலடைக்க நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். ஆனால், நாங்கள் மரணத்தைத் தேர்வு செய்துள்ளோம்.

மரணத்தை வைத்து எங்களைப் பயமுறுத்துவதற்கு யாராலும் முடியாது. எமது மரணமும், எமது உயிரும், எமது வாழ்க்கையையும் ஒருநாள் சிங்கள இனம் நினைவுகூரும். திருகோணமலையில் எம்மைத் தாக்கினார்கள். நாங்கள் பொறுத்துக்கொண்டோம். விகாரமகாதேவி பூங்காவில் எம்மைத் தாக்கினார்கள். அங்கும் பொறுத்துக்கொண்டோம்.
அதேபோல, புத்த பெருமானின் புனித தாதுக்கள் வைக்கப்பட்டிருக்கும் அநுராதபுரத்திலும் எம்மைத் தாக்கினார்கள். தாக்கியப் பின்னர் எமது துயரங்களைத் தெரிவிப்பதற்குக் கூட இடமளிக்கவில்லை.
அதர்மமான விடயங்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எந்தத் தீர்பபுக்கள் வந்தாலும் தலை நிமிர்ந்து நிற்கும் மனிதர்கள் நாம். சிங்களத் தாயின் கருவறையில் பிறந்தவர்கள் நாம். சிங்களத் தாயின் தாய்ப்பாலை அருந்தி வளர்ந்தவர்கள் நாம்.
எனவே நீதிமன்ற உத்தரவு வந்துவிட்டது, எங்களை கைது செய்துவிட்டார்கள் என்பதற்காக நாம் எந்த விதத்திலும் பயப்படப் போவதில்லை. அவ்வாறு பயப்படுபவர்களாக இருந்தால் நாம் இந்த இடத்திற்கு வந்திருக்கவே மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.