சுற்றுலா விசாவில் செல்ல வேண்டாம்..! வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் தவறான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு, வெளிநாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சுற்றுலா விசாவில் (visit visa) வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று(11.11.2026) பொது அறிவிப்பொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் பயணிக்க வேண்டாம்..
இதற்கமைய, வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி மலேசியா, துபாய் மற்றும் ஓமான் போன்ற நாடுகளுக்குச் சுற்றுலா விசாவில் சென்ற பல இலங்கையர்கள், தற்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா விசா என்பது பணி விசா (work visa) அல்ல என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சு, சுற்றுலா விசாவில் வெளிநாடுகளில் வேலை செய்வது அந்தந்த நாடுகளின் சட்டங்களை மீறும் செயலாக அமையக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

இத்தகைய ஏற்பாடுகளின் கீழ் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கைது செய்யப்படலாம், தடுத்து வைக்கப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம், மேலும், அவர்கள் மோசடிகளுக்கோ அல்லது மனிதக் கடத்தலுக்கோ ஆளாகும் அபாயமும் உள்ளது என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிலருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் போகலாம், ஊதியம் வழங்கப்படாமை, ஊதியக் குறைப்பு, கடவுச்சீட்டுகளை இழத்தல் மற்றும் கடுமையான நிதி நெருக்கடிகள் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.
குறிப்பாக, வெளிநாடு சென்றடைந்த பின்னர், சுற்றுலா விசாவைப் பணி விசாவாக மாற்றிக்கொள்ளலாம் என்றோ அல்லது அங்கு சென்றதும் வேலை பெற்றுக்கொள்ளலாம் என்றோ கூறப்படும் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வேலை தேடும் அனைத்து இலங்கையர்களும் சட்டப்பூர்வமான ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், வெளிநாடு செல்வதற்கு முன்னதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) பதிவு செய்துகொள்ளுமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நிதி நிலை மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு, முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது மிக அவசியமானது என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.