இலங்கையின் முக்கிய அரச நிறுவனங்கள் குறித்து வெளியான தகவல் - பதிவாகியுள்ள மாற்றம்
இலங்கையின் முக்கிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்தமாக 259.3 ரூபாய் பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளன.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 227.8 பில்லியன் ரூபாய் இலாபத்துடன் ஒப்பிடுகையில், இது 13.8% அதிகரிப்பாகும் என நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக இலாபம் ஈட்டிய நிறுவனங்கள்
- இலங்கை வங்கி – 62.7 பில்லியன் ரூபாய்
- ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) – 36.5 பில்லியன் ரூபாய்
- மக்கள் வங்கி – 32.6 பில்லியன் ரூபாய்
- இலங்கை துறைமுக அதிகாரசபை – 34.5 பில்லியன் ரூபாய்
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் – 29.2 பில்லியன் ரூபாய்
- தேசிய சேமிப்பு வங்கி – 22.6 பில்லியன் ரூபாய்

நட்டத்தை பதிவு செய்த நிறுவனங்கள்
இந்த நிலையில், நட்டத்தைப் பதிவு செய்த நிறுவனங்களாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 35.6 பில்லியன் ரூபாய் நட்டத்தைப் பதிவு செய்துள்ளது.
லங்கா சுகர் நிறுவனம் 1.53 பில்லியன் ரூபாய் நட்டத்தையும், இலங்கை போக்குவரத்துச் சபை 471 மில்லியன் ரூபாய் நட்டத்தையும் பதிவு செய்துள்ளன.
இதற்கிடையில், மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 41 பில்லியனும், தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனத்திற்கு 15 பில்லியன் ரூபாய்களும் திறைசேரியால் மானியமாக வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், 33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கையில் அரசாங்கத்தின் மறுசீரமைப்புப் பிரிவு ஈடுபட்டு வருவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.