சஜித் வெறுமனே பேசுபவர் அல்லர் - ரஞ்சித் மத்தும பண்டார புகழாரம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி மத பாரபட்சமின்றி மக்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டுள்ள ஒரே தலைவர் அவரே என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்றுமுன்தினம்(01.11.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வழிபாட்டுத் தலங்களுக்கும் பாரபட்சமின்றி உதவி
அங்கு மேலும் உரையாற்றுகையில், "எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒருபோதும் ஊழல், மோசடிகளில் ஈடுபடாத, எந்தவிதக் கறைகளும் படியாத தூய்மையான அரசியல் தலைவராவார்.

நன்கு கல்வி கற்றுத் தேர்ந்துள்ள அவர், அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் பரந்த அறிவுடன் கருத்துக்களை முன்வைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவராவார்.
சஜித் அதிகமாகப் பேசுகின்றார் என்ற விமர்சனங்கள் சிலரால் முன்வைக்கப்பட்டாலும், அவர் வெறுமனே பேசுவதோடு நின்றுவிடாமல் களத்தில் இறங்கி ஆக்கபூர்வமாக வேலைகளைச் செய்து முடிப்பவர்.
அண்மைக்காலத்தில் நாட்டில் பௌத்த விகாரைகளுக்கும் தாதுகோபுரங்களுக்கும் அதிகளவில் உதவி செய்த தலைவராக அவர் விளங்குவதுடன், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த கத்தோலிக்க தேவாலயங்களைப் புனரமைத்தல், முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு ஆதரவளித்தல் என அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பாரபட்சமின்றி உதவி புரிந்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே பாடசாலைகளுக்கு நவீன ஸ்மார்ட் வகுப்பறைகளையும் புதிய தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகத் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றார்.
நாட்டை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசெல்ல
தற்காலத்தில் இந்த நாட்டு இளைஞர்களும் மாணவர்களும் வெளிநாடுகளுக்குச் செல்வதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்து இங்கேயே தங்கி வாழ்வதற்கு ஏற்ற வகையில் நாட்டின் பொருளாதாரம் உடனடியாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

வரலாற்று ரீதியாக டி. எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே. ஆர். ஜயவர்தன மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோர் உருவாக்கிய பொற்கால மறுமலர்ச்சி மீண்டும் இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டில் 1988–1989 காலப்பகுதி வன்முறைகள், 2001ஆம் ஆண்டு மற்றும் கோட்டாபயவின் ஆட்சி காரணமாகப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தபோதெல்லாம், அதனை மீளக்கட்டியெழுப்பிய வரலாறு எங்களது பாரம்பரியத் தலைமைத்துவங்களுக்கே உண்டு.
எனவே, நாட்டின் நலன் கருதி இரு பிரதான கட்சிகளும் இணைய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், நாட்டை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசெல்லவும், விவசாயிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களையும் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்பவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மிக விரைவில் கைகோர்த்து வெற்றிகரமான அரசியல் கூட்டணியை உருவாக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam