நூல் வெளியீட்டுக்கு தடை என்பது ஈழத் தமிழர் கருத்து சுதந்திரத்தின் மீதான தடையே

Jaffna University of Jaffna
By T.thibaharan Nov 01, 2026 01:02 PM GMT
Report

"இலங்கையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் தோற்றமும் நடைமுறையும்" என்ற தலைப்பில் மு.திருநாவுக்கரசு  எழுதிய நூல் ஒக்டோபர் 30ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையினரின் ஏற்பாட்டில் அறிமுகவிழா நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒக்டோபர்28ம் திகதி அந்நூலுக்கான அறிமுக விழாவை யாழ் பல்கலைக்கழகத்தில் செய்யக்கூடாது என பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு யாழ் பல்கலைக்கழகத்திற்கு கட்டளை பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் இலங்கை அரசு தமிழ் மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீது தடைவிதித்துள்ளது.

 சிங்களவர்கள் மேற்கொள்கின்ற வன்முறை 

இலங்கைத் தீவின் ஆட்சியாளர்கள் எத்தகைய மேன்மையான கருத்துக்களை மேடைகளிலே முழங்கினாலும் ஈற்றில் அவர்கள் நடைமுறையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகலையின் நடத்துனர்களாகவும், தமிழின ஒழிப்பையும் தமிழின அடக்கு முறையையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்பவர்களாகவுமே செயற்படுகிறார்கள் என்பதுதான் உண்மையாகும்.

ஈழத் தமிழர்கள் மீது சிங்களவர்கள் மேற்கொள்கின்ற வன்முறை என்பது தற்செயலான நிகழ்வு அல்ல என்றும் அது மகாவம்சம் என்ற பௌத்த சிங்களவர்களின் புனித நூலின் விருப்புவாதமாகிய "தம்மதீப" கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டு திட்டமிட்ட முறையில் ஈழத் தமிழர்களை படிப்படியாக இலங்கைத் தீவில் சிங்கள மக்களாலும் பௌத்த சிங்கள அரசாலும் அழிக்கின்ற செயல்முறையே என்பதை அழுத்தம் திருத்தமாக மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை....“ என்று இந்நூல் வரையறை செய்கிறாது.

தமிழ் மக்கள் மீது கடந்த 76 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொள்ளப்படுகின்ற இன வன்முறைக்கும், இன அழிப்புக்கும் எத்தகைய தீர்வுமின்றி, தீர்வை கொடுக்கக்கூடிய மனப்பாங்குமின்றி இருக்கின்ற சிங்கள அரசியல் சமூகம் பற்றியும், முள்ளிவாய்க்காலில் பாரிய இழப்புக்களுடனும் தோல்விகளுடனும் யுத்தம் ஓய்ந்துள்ள இன்றைய சூழலில் 21ம் நூற்றாண்டின் காலிறுதி பகுதியில் நின்று, உலகளாவிய கடல்சார், புவிசார் பின்னணியில் நின்று, இப்போது வெளிவந்துள்ள இச் சிறுநூல் இனப்பிரச்சனையின் அந்தரங்க ஆத்மாவை உள்நாடு , அண்டைநாடு , உலகளாவிய சர்வதேச அரசுகள் தழுவிய பின்னணியில் உட்படம் பிடித்துக் காட்டுகிறது.

இதுதான் சிங்கள அரசுக்கு பெரும் தலைவலியாகவும் குடைச்சலாகவும் அமையும் என அச்சப்படுகிறது என்பதனாலே இந்நூலுக்கு தடை விதித்து விட்டது.

இலங்கையின் இனப் பிரச்சனை என்பது வெறுமனே சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையான பிரச்சனை அல்லவென்றும் அது இந்திய --இலங்கை அரசுகளுக்கு இடையேயான அரசியல் ஆதிக்க போட்டியின் வெளிப்பாடு என்றும், இந்திய ஆதிக்கம் இலங்கையின் நிலைபெற ஈழத் தமிழர் ஏதுவாக அமைந்திடுவர் என்று அஞ்சும் இலங்கை அரசானது அந்த வகையில் இந்தியாவுக்கு எதிரான தனது யுத்தத்தை ஈழத் தமிழர் மீது புரிகின்றது என்று ஆணித்தரமாகவும், திட்டவட்டமாகவும் இந்த நூலில் நூலாசிரியர் கூறுகிறார்.

நூல் வெளியீட்டுக்கு தடை என்பது ஈழத் தமிழர் கருத்து சுதந்திரத்தின் மீதான தடையே | The Ban On The Publication Of Books Ban Freedom

அதாவது இந்தியாவுக்கு எதிரான தனது யுத்தத்தை இலங்கை அரசு ஈழத் தமிழர் மீது புரிவதாகவும் இந்தியாவுக்கு எதிரான இலங்கை அரசின் யுத்தத்துக்கே ஈழத் தமிழர் இலங்கை அரசுடன் முகம் கொடுக்கின்றனர் என்றும் புவிசாரா் அரசியற் தத்துவ அடிப்படையில் இப்பிரச்சனையை அவர் விளக்குகிறார்.

“நடக்கும் ஒரு செயலில் ஏற்படக்கூடிய தீமையைத் தெரிந்து, அதைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கோழைத் தனமாக ஒதுங்குவதை விடவும் அந்தத் தீமையின் ஒரு பகுதியாய் அதற்குத் தான் பலியாக நேர்ந்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்த்துக்கொண்டு செயல்படுவதே உண்மையான சான்றாண்மைக்கு அழகாகும்“ என்பதற்கிணங்க மு. திருநாவுக்கரசு தமிழ் மக்களின் விடுதலைக்கான வழிவகையை ரத்தமும் சதையுமாக அச்சமின்றி எழுதி வருபவர்.

அத்தகையவருடைய நூலுக்கு இலங்கையில் தடை விதிப்பது என்பது ஈழத் தமிழர்களுக்கான கருத்து சுதந்திரத்தை தடை செய்வதாகவே அமைகிறது என்ற அடிப்படையில் இத்தடையை உலகளாவிய நூல்களுக்கான தடைகளும், பிறந்தநாள் அவற்றின் கருத்தியல் வளர்ச்சிகளும், புரட்சிகளும் பற்றி பார்ப்போம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த மு. திருநாவுக்கரசு அவர்களின் "கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை..." நூலுக்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் தடை விதித்திவிட்டனர் என்றால் அந்தத் தடை ஈழத்தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், நூலின் மீதான ஆர்வத்தையும், ஒரு அரசியல் ஆதரவையும் புத்தகத்தையும், அதிகரிக்கக்கூடியது.

ஆனால் இவை தானாகவே நிகழும் என்பதோ, நூலின் அனைத்து வரலாற்று மற்றும் அரசியல் வாதங்களும் முன்மொழிவுகளும் தமிழ் அரசியல் தரப்பினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுமா நடைமுறைப்படுத்தப்படுமா என்பவை இன்னும் ஒரு பக்க வலுவான கேள்விகளாக உள்ளன.

ஒரு நூலைப் பொதுவெளியில் வெளியிடத் தடை விதிக்கப்படும்போது, அதில் என்ன இருக்கிறது?, அது ஏன் அதிகாரத்திற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது! என்ற கேள்விகள் எழுகின்றன.

இதனால் முன்பு அந்த நூலைப் பற்றி அறியாதவர்கள்கூட அதைத் தேடிப் படிக்க முயலலாம். இது கருத்துச் சுதந்திரம் சார்ந்த பலமான விவாதத்தை உருவாக்கும். நூலின் வாதங்களுடன் உடன்படாதவர்கள்கூட, அதை வெளியிடுவதற்கான உரிமையை ஆதரிக்கலாம்.

இதனால் விவாதம் நூலின் உள்ளடக்கத்திலிருந்து விலகி, அரசின் அதிகாரம், பல்கலைக்கழகங்களின் சுயாதீனம், கல்விசார் சுதந்திரம் ஆகியவற்றை நோக்கி நகரலாம்.

ஈழத்தமிழர்களின் வரலாறு 

ஈழத்தமிழர்களின் வரலாறு, இனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டுகள், தேசிய உரிமைகள் ஆகியவற்றுடன் நூல் தொடர்புபடுத்தப்படும்போது, தடை ஒரு தனிப்பட்ட நூலுக்கு எதிரான நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படாமல், தமிழர்களின் வரலாற்றையும் அரசியல் அனுபவங்களையும் வெளிப்படுத்துவதற்கான உரிமைக்கு எதிரான செயலாகவும் புரிந்துகொள்ளப்பட்டு அது ஒரு அடையாள அரசியல் வலுப்பெறும்.

வெளியீட்டுத் தடை பற்றிய செய்திகள், சமூக ஊடக விவாதங்கள், விமர்சனங்கள், மறுபதிப்புகள் மற்றும் இணையவழிப் பகிர்வுகள் ஆகியவை நூலின் வாசகர் வட்டத்தை விரிவாக்கும். தடை, சாதாரண வெளியீட்டைவிட அதிகமான கவனத்தை உருவாக்கி நூலின் பரவலை அதிகரிக்கசி செய்யும்.

இந்த விளைவுகள் அனைத்தும் தணிக்கை நடவடிக்கைகளால் ஏற்படக்கூடியவை. அரசியல் உளவியலில், ஒரு கருத்தைத் தடுக்க முயல்வது சில சூழல்களில் அந்தக் கருத்தின்மீது மக்களின் ஆர்வத்தையும் அதனுடன் தங்களை அடையாளப்படுத்தும் உணர்வையும் அதிகரிக்கலாம்.

இதனை எதிர்வினை விளைவு (reactance effect) அதிகம் ஏற்படும். ஒரு நூலுக்குதடை விதிக்கப்பட்டால் அது மக்கள் ஆதரவாக மாறுமா?அதற்கு பல சாத்தியமான விளைவுகள் உள்ளன.

நூல் வெளியீட்டுக்கு தடை என்பது ஈழத் தமிழர் கருத்து சுதந்திரத்தின் மீதான தடையே | The Ban On The Publication Of Books Ban Freedom

எனவே, தடை என்பது ஆதரவை அதிகரிப்பதற்கான ஒரு காரணியாக இருக்கலாம், ஆனால் ஆதரவு எவ்வளவு அதிகரிக்கும் என்பதைத் தீர்மானிப்பது நூலின் உள்ளடக்கம், தடைக்கான காரணம், தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்வு, தமிழ் ஊடகங்களின் அணுகுமுறை இன்றைய சமூக வலைத்தளங்கள் ஆகியவையாகும். இந்த நூலின் தடை விடயத்தில் தாக்கம் ஏன் ஆழமானதாக இருக்கும்? என்றால் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பது இனப்பிரச்சினையை மட்டும் விவரிக்க முயலும் நூலல்ல.

அது மூன்று முக்கியமான வாதங்களை முன்வைக்கிறது.

1)வரலாற்று வாதம் இது இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் வளர்ச்சியிலும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் வேர்கள் இருப்பதாக நூல் வாதிடுகிறது.

2)கடல்சார் அரசியல் வாதம் இது ஈழத்தமிழர்களின் அரசியல் தோல்விகளையும் எதிர்கால அரசியல் வாய்ப்புகளையும் பாக்கு நீரிணை மற்றும் இந்து சமுத்திரத்தின் புவிசார் அரசியலுடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்கிறது.

3)அரசியல் தீர்வு வாதம் என்பது கடந்தகாலத் தோல்விகளை மீளாய்வு செய்து, தமிழர்களின் இறையாண்மை மற்றும் அரசியல் உரிமைகளைப் புதிய புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில் அணுக வேண்டும் என முன்வைக்கிறது.

இத்தகைய வாதங்களை ஒரு பல்கலைக்கழகச் சூழலில் விவாதிக்க அனுமதிக்காமல் தடை விதிக்கப்பட்டால், அது நூலின் கருத்துக்களைத் தாண்டி, தமிழர்களின் வரலாற்றை ஆராய்வதற்கும் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உள்ள உரிமை குறித்த கேள்வியையும், சர்ச்சைகளையும் எழுப்பும். பல்கலைக்கழகம் என்பது அதிகாரபூர்வமான கருத்துக்களை மட்டும் மீளுரைக்கும் இடமாக இருக்கக்கூடாது.

அது அமைந்துள்ள பிராந்திய மக்களின் விருப்புக்களையும், அபிலாசைகளையும், தேவைகளையும் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். அத்தோடு மாறுபட்ட வரலாற்று விளக்கங்கள், அரசியல் கோட்பாடுகள், அரசை விமர்சிக்கும் கருத்துக்கள் ஆகியவை ஆதாரங்களுடன் விவாதிக்கப்படும் அறிவுசார் வெளியாக பிராந்திய பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும்.

இப்போது இந்த நூல் அறிமுக விழாவை யாழ் பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கு பல்கலைக்கழகம் மாணிய ஆணைக்குழுவுக்கு கட்டுப்பட்டு நிறுத்தியதன் மூலம் இலங்கையின் ஆட்சியாளர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு எப்போதும் தடையாக இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள், எதிர்காலத்திலும் இருப்பார்கள் என்பதே இங்கே வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

 நூலுக்கான தடை

ஒரு அறிவு சார் சமூகத்தை உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம் அறிவு சார்ந்த விவாதங்களை நடத்துவதற்கும் பல்துறை சார்ந்தவர்கள் கருத்தரங்கங்களில் பங்குபற்றவோ கருத்துக்களை விவாதிக்கவோ முடியாது அல்லது தடுப்பதோடு பல்கலைக்கழக ஊழியர்களைத்தாண்டி வெளி அறிஞர்கள் பல்கலைக்கழக கருத்தவர்களில் பங்கு பற்றுவதற்கும் அவர்கள் தமது அறிவியல் கருத்தையும் சமூகம் சார்ந்த அனுபவங்களையும் பகிர்வதற்கும் அதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்களை பல்துறை சார்ந்த சிந்தனையாளர்களாக மாற்றுவதற்குமான முயற்சிகளுக்கு பல்கலைக்கழகமோ அல்லது பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவோ தடுப்பதற்கான அல்லது நிராகரிப்பதற்கான சட்ட ரீதியான நுணுக்க ஏற்பாடுகளை ஒழுக்க விதிகள் சார்ந்து ஏற்படுத்தி வைத்திருப்பார்களேயானால் அத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் எதிர்கால சந்ததியினர் மீது நடத்தப்படுகின்ற அறிவியல் காயடிப்பாகவே(நலமடிப்பு) அறிவியல் உலகத்தாரால் கணிக்கப்படுகிறது.

 பல்கலைக்கழகம் என்பது ஆய்வுகளை மேற்கொள்ளுகின்ற கருத்தாகங்களை உருவாக்குகின்ற இடமேயன்றி வினோத விந்தை காட்டுவதற்கு விலங்குகளை பழக்கும் பயிற்சி நிலையமாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பது பல்கலைக்கழகமாக கருதப்படமாட்டாது.

பல்கலைக்கழகம் என்ற சொல்லிலிருந்து அதன் பொருளை புரிந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழகம் என்பது கற்பிக்கும் இடமல்ல அது கற்றுக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டும். ஒரு நூல்பற்றி பல்கலைக்கழகத்தில் விவாதிக்கத் தடை விதிக்கப்படுகின்றது என்றால் அது அறிவுசார் மாணவர்களின் வளர்ச்சிக்கும், அறிஞர்களின் பங்களிப்புப்புக்கும், அறிவியல் வளர்ச்சியின் மீதான காயடிக்கும் செயலாகவே அமைந்துவிடும்.

நூல் வெளியீட்டுக்கு தடை என்பது ஈழத் தமிழர் கருத்து சுதந்திரத்தின் மீதான தடையே | The Ban On The Publication Of Books Ban Freedom

1980 களில் இலங்கையின் பல்கலைக்கழகங்களில் முன்னுதாரணமான, முன்மாதிரியான அறிவுசார் அரசியல் ஆய்வுகளையும், வரலாற்று ஆய்வுகளையும் செய்த யாழ் பல்கலைக்கழகம் தற்போது நீண்ட காலமாக அறிவுசார் கருத்தமர்வுகளையும், விவாதங்களையும் சுதந்திரமாக நடத்த முடியாமல் வெறும் பாடவிதானங்களை மாத்திரமே மாணவர்கள் மனனம் செய்து அதனை அப்படியே பரீட்சை வினாத்தாறில் ஒப்புவித்து அதில் தேர்ச்சி பெற்றதாக காகித்த்தாள் சான்றிதழை பட்டங்களாக வழங்குகின்ற பயிற்சி நிலையமாக மாற்றப்பட்டுவிட்டது என்பது தமிழர் கல்வியியலின் துரதிஷ்டமான பக்கங்களே. ஒரு சமூகத்தின் அறிவியல் மட்டத்தையும் அதன் அறிவியல் கொள்ளளவையும் எடை போடுவதற்கு அந்த சமூகம் வாழ்கின்ற பிராந்தியத்தின் பல்கலைக்கழகங்களின் அறிவியல் சார் செயற்பாடும் அது வெளிப்படுத்துகின்ற அறிவியல் கருத்தியலுமே சான்றாக அமையும்.

இந் நூலுக்கான தடை என்பது ஈழத்தமிழர்களின் அரசியலில் ஏற்படுத்தக்கூடிய நீண்டகால விளைவுகளை நான்கு நிலைகளில் மதிப்பிடலாம்.

1) இது ஒரு அறிவுசார் ஆக்கம் என்ற அடிப்படையில் நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து, ஈழத்தமிழர்களின் வரலாறு மற்றும் அரசியல் பற்றிய புதிய விவாதங்கள் உருவாகும்.

2) இது ஒரு அரசியல் ஆக்கம் என்ற வகையில் நூலுக்கான தடை, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டுவதால், பல்வேறு தமிழ் அரசியல் அமைப்புகளும், சிவில் சமூகக் குழுக்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

3) புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேச நேக்குநிலையில் பார்த்தால் ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள், சட்டரீதியான ஆதாரங்கள், மற்றும் தமிழர் தாயகத்தினல் இயங்குகின்ற ஒரு பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ விளக்கங்கள் வெளிவந்தால், இந்த விவகாரம் சர்வதேச கல்விசார் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதமாக மாற்றி அமைக்க முடியும்.

4) நூலுக்கான தடை என்பது ஈழத் தமிழர்களின் ஒரு நீண்டகால வரலாற்று நினைவில் நூலின் தடையும் பதிவாகிவிடும். எனவே நுாலின் உள்ளடக்கத்தை விடவும் பன்மடங்கு அதிகமாக நினைவுகூரப்படும் அரசியல் சம்பவமாக மாற்றம் அடைந்து விடும்.

அதேவேளை இந்த நூலுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது ஈழத்தமிழர்களிடையே கொந்தளிப்பையும் நூலின் மீதான ஆதரவையும் அதிகரிக்கக்கூடியது. குறிப்பாக, நூலின் வாதங்களைப் பற்றிய முன் அறிவில்லாதவர்கள்கூட, ஏன் இதனை வெளியிட அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பலாம்.

அந்தத் தடையை நூலின் கருத்துக்களுக்கான வெற்றியாகக் கருதுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல் அதை அறிவுசார் விவாதத்திற்கான ஒரு வாய்ப்பாக மாற்றுவதே முக்கியமானது.

ஒரு நூலைத் தடை செய்வதன் மூலம் அதன் கருத்துக்களைப் பற்றிய விவாதத்தை முழுமையாக முடக்கிவிட முடியாது. அந்தத் தடைதான் விவாதத்தின் தொடக்கமாக அமைகிறது என்ற அடிப்படையில் உலக வரலாற்றில் தடைசெய்யப்பட்ட நூல்களும் அவற்றின் தாக்கங்களும் பற்றி பார்ப்போம்.

கலிலியோ பூமியை மையமாகக் கொண்ட பிரபஞ்சக் கோட்பாட்டையும் சூரியனை மையமாகக் கொண்ட கோட்பாட்டையும் விவாதித்த Dialogue Concerning the Two Chief World Systems — 1632 என்ற நூல் 1633ல் ரோமன் விசாரணை அமைப்பால் இந்த நூல் தடைசெய்யப்பட்ட நூல்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. கலிலியோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இருந்தாலும், 1635-இல் அவருடைய நூல் நெதர்லாந்தின் லெய்டனில் லத்தீன் மொழிபெயர்ப்பாக வெளியானது.

இதனால் இத்தாலியில் தடைசெய்யப்பட்ட கருத்துக்கள் ஐரோப்பிய அறிவுசார் வட்டாரங்களைச் சென்றடைவதற்கான வழி கிடைத்தது.

கலிலியோவின் அறிவியல் கோட்பாடுகள் தடை செய்யப்பட்ட பின்னர்தான் அறிவுசார் வரலாற்றில் நிலைபெற்றது ரஷ்யாவில் ஜார்ஜி பிளெகானோவ் (Georgi Plekhanov) எழுதிய நூல்கள் சாராட்சிக்கு எதிரான புரட்சிகர அரசியல் சிந்தனையையும் மார்க்சியத்தையும் ரஷ்யாவில் பரப்பியதில் முக்கியப் பங்காற்றினார்.

அவர் 1880ல் அரசியல் நாடுகடத்தல் வாழ்க்கையைத் தொடங்கினார்;, வெளிநாட்டிலிருந்து எழுதியும் வெளியிட்டும் ரஷ்ய அரசியல் விவாதங்களில் தொடர்ந்து பங்குபற்றினார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரஷ்யாவில், சாராட்சி அரசு அச்சு வெளியீடுகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியது. 1855–1865 காலத்தில் தணிக்கைத் தளர்வுகள் அறிமுகமானபோதும், 1866 முதல் கட்டுப்பாடுகள் மீண்டும் வலுப்பெற்றன.

புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட நூல்களும் இதழ்களும் ரஷ்யாவிலும் வெளிநாடுகளிலும் வெளியிடப்பட்டன.

தடைசெய்யப்பட்ட நூல்கள்

பிளெகானோவின் வரலாற்றை இங்கு புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒரு சிந்தனையை அதன் ஆசிரியர் வாழ்ந்த நாட்டில் வெளியிட முடியாதபோதும், வெளிநாட்டு வெளியீடுகள், மொழிபெயர்ப்புகள், மறைமுக விநியோகம் ஆகியவை அந்தச் சிந்தனை உயிர்வாழ்வதற்கான வழிகளாக அமைந்தன. ரஷ்ய வரலாற்றில் அலெக்சாண்டர் ஸ்காபிசெவ்ஸ்கி எழுதிய ரஷ்யத் தணிக்கையின் வரலாறு குறித்த நூல் 1892-இல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் புகழ் அதிகரித்த பின்னர், தணிக்கை அதிகாரிகள் அதை பொது நூலகங்களிலிருந்து நீக்கினர்.

இது தடைசெய்யப்பட்ட நூல்களின் வரலாற்றில், தணிக்கையையே விமர்சித்த ஒரு நூல் அதிகாரிகளின் நடவடிக்கையால் மேலும் கவனத்தைப் பெற்றதற்கான குறிப்பிடத்தக்க உதாரணம்.

ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஓர்வெல் (George Orwell) எழுதியபுரட்சியின் பெயரில் உருவாகும் அதிகாரக் குவிப்பு, அரசியல் பிரசாரம், ஆட்சியாளர்களின் இரட்டை அளவுகோல்கள் ஆகியவற்றை விலங்குகள் பற்றிய உருவகக் கதையின் வழியாக விமர்சித்த “Animal Farm”(1945) என்ற நூல் தடைசெய்யப்பட்டாலும் அது உயிர்வாழ்ந்தது. அவ்வாறே அவர் அரசின் கண்காணிப்பு, வரலாற்றை மாற்றி எழுதுதல், மொழியின் மூலம் சிந்தனையைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட Nineteen Eighty-Four (1949) என்ற நாவலுக்கும் தடை விதிக்கப்பட்டது.

நூல் வெளியீட்டுக்கு தடை என்பது ஈழத் தமிழர் கருத்து சுதந்திரத்தின் மீதான தடையே | The Ban On The Publication Of Books Ban Freedom

இந்த இரண்டு நூல்களும் சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவின் பல கம்யூனிச ஆட்சிகளிலும் நீண்டகாலம் தடை செய்யப்பட்டிருந்தன. 1979-இல் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் தடை செய்யப்பட்ட நூல்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சோல்ஷெனிட்சின் The Gulag Archipelago — 1973 என்ற நூல் சோவியத் ஒன்றியத்தின் அரசியல் ஒடுக்குமுறை, கைது நடவடிக்கைகள் மற்றும் கட்டாயத் தொழிலாளர் முகாம்களின் வரலாற்றை ஆவணங்களையும் சாட்சியங்களையும் கொண்டு ஆராய்ந்த நூல்.

இந்த நூல் 1973-இல் பாரிஸில் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது. சோவியத் ஒன்றியத்தில் அதைச் சுதந்திரமாக வெளியிட முடியாத சூழலில், அது வெளிநாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவியது. 1974-இல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு, குடியுரிமை பறிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பின்னர் 1989-இல்தான் நூல் சோவியத் ஒன்றியத்தில் சட்டபூர்வமாக வெளியிடப்பட்டது. இங்கு ஒரு நூலின் மீதான தடையுடன் நூலின் கருத்து நூலின் கருத்தை முடக்கி வைக்க முடியாது. அரசின் கடந்தகாலச் செயல்கள் குறித்த சாட்சியங்கள், ஆவணப்படுத்தப்பட்ட நினைவுகள், அவற்றைப் பொதுவெளியில் விவாதிப்பதற்கான உரிமை ஆகியவற்றைச் சுற்றியதாக அது விரிவடையும்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு இத்தகைய நூல்களே நோதியங்களாக நோதித்து அந்நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூக இயக்கங்கள், அரசின் நிறுவனச் சிக்கல்கள் உள்ளிட்ட பல படிமங்களின் கொதிநிலைக்கும் கிளர்ச்சிக்கும் புரட்சிக்கும் வித்திட்ட காரணிகளாக இணைந்து செயல்பட்டன.

ஈழத்தமிழர் பரப்பில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை நூல் ஈழத்தமிழர்களின் வரலாற்று அனுபவங்கள், அரசின் கொள்கைகள் மற்றும் அரசியல் தோல்விகள் குறித்த தனது வாதங்களை ஆவணங்களுடன் முன்வைதுள்ளதால், அது ஒரு நூலைத் தாண்டி வரலாற்று நினைவையும் அரசியல் பொறுப்புக்கூறலையும் பற்றிய விவாதத்திற்குப் பங்களிக்கும்.

உலக வரலாற்றின் இந்த உதாரணங்களிலிருந்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை நூலின் வெளியீட்டுத் தடை விதிப்பு உலகளாவிய தணிக்கை வரலாற்றுடன் ஒப்பிட்டு பிளெகானோவ், ஓர்வெல், சோல்ஷெனிட்சின், கலிலியோ ஆகியோரின் வரலாற்றுச் சூழல்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.

அவற்றின் விளைவுகளிலிருந்தை இந்த நூலுக்கான தடை என்பது இந்த நூலின் முக்கியமான அளவுகோலாக மாறும். தடை காரணமாக அது எவ்வளவு பரபரப்பை உருவாக்கியது என்பதைக் காட்டிலும், அது எவ்வளவு வாசிக்கப்படுகிறது, எவ்வளவு ஆவணங்களுடன் ஆராயப்படுவதால் எத்தகைய திறந்த அறிவுசார் விவாதத்தை உருவாக்குகிறது என்பதாக இருக்க வேண்டும்.


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 01 November, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US