மகாநாயக்க தேரர்கள் கட்டிய பிரித் நூலை அவிழ்த்து வீசிய ஜனாதிபதி.. எழுந்துள்ள புதிய சர்ச்சை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் போது அவர்கள் அணிவிக்கும் பிரித் நூலை மறுகணமே அவிழ்த்து வீசி விடுகிறார் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து சிங்களவர்களுக்கு எதிராகவும், பௌத்தத்துக்கு எதிராகவும் செயற்படுகிறது.
ஜனாதிபதி பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதில்லை. மகாநாயக்க தேரர்களை சந்திக்கும் போது அவர்கள் அணிவிக்கும் பிரித் நூலை மறுகணமே அவிழ்த்து வீசி விடுகிறார்.
அரசுக்கு உரிமையில்லை..
பௌத்த மதத்துக்கு எதிரான இந்த அரசாங்கத்துக்கு சிங்கள பௌத்தர்களின் இதயமான புனித அநுராதபுரம் நகரை அபிவிருத்தி செய்ய எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள புனித அநுராதபுரம் நகரம் அபிவிருத்தியால் ஏற்படும் பாரிய விளைவுகளை முன்கூட்டியதாகவே அறிவித்துள்ளோம்.
இந்த திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி வழங்குவதாக குறிப்பிடப்படுகிறது. ருவன்வெலிசாய விகாரை பௌத்தர்களின் புனித தலமாகவும், சிங்களவர்களின் இதயமாகவும் காணப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ருவன்வெலிசாயவை அண்மித்த பகுதியை அகழ்ந்தால் தூபி உடைந்து விழும் நிலைமை ஏற்படும். ஆகவே இந்த பாவச்செயலுக்கு இந்தியா பங்காளியாக கூடாது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வருவதற்காகவும், பொய்யுரைத்தார் ஆட்சிக்கு வந்ததன் பின்னரும் பொய்யுரைக்கிறார். என்னை தொடர்புப்படுத்தியும் பல பொய்களை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு தற்போது பதவிக்கான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.