வவுனியாவில் தொடருந்து பாதையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்: புனரமைப்பு பணி இடைநிறுத்தம் (Photos)
வவுனியா - மதவுவைத்தகுள மக்கள் பயன்படுத்தும் பாதையை மறித்து இடம்பெறும் தொடருந்து பாதை புனரமைப்பு பணிகளை நிறுத்தக் கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.
இதனையடுத்து தொடருந்து பாதை அமைக்கும் செயற்பாடு நேற்றைய தினம் (12.05.2023) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வவுனியா - மதவுவைத்தகுளத்தில் இருந்து ஏ9 வீதிக்கு செல்வதற்காக மூன்று முறிப்பு
பகுதியில் அமைந்துள்ள தொடருந்து தண்டவாள கடவையினை கடந்த 20 வருடங்களாக சுமார் 350
குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அதற்கு தடையேற்படுத்தும் முகமாக தொடருந்து பாதையினை அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
வவுனியாவிலிருந்து அநுராதபுரம் நோக்கி தொடருந்து பாதை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே இந்த புனரமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடருந்து பாதை
இதன்போது நிரந்தர பாதை புனரமைப்பு பொறுப்பதிகாரி டபுள்யு. குனசிங்க குறித்த இடத்திற்கு வருகை தந்து ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடிய போதும் இதற்கான தீர்வு கிடைக்காத நிலை காணப்பட்டுள்ளது.
எனவே தொடருந்து பாதை அமைப்பதற்கான இயந்திரத்தையும் தடுத்து வைத்து, மக்கள் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்பின்னர் தொடருந்து பாதை அமைக்கும் செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



