அரசியல் கேள்வி - ஒரு அறிவுச் சமூகம் எப்படியிருக்க வேண்டும்..!
ஈழத் தமிழர்களின் யூதக் கனவு என்னும் தலைப்பில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். 2009ல் ஏற்பட்ட அழிவு, அதனைத் தொடர்ந்து தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்த ஈழத் தமிழர் அரசியலை முன்வைத்தே அதனை எழுதியிருந்தேன். இன்று நிலைமை அப்போதிருந்ததை விடவும் இன்னும் மோசமாகியுள்ளது.
முன்னர் யாரோ எழுதியதை படித்த நினைவுண்டு. உலகில் ஜே எழுத்தில் ஆரம்பிக்கும் பெயரிலுள்ள மூன்று இனங்கள் அறிவில் உச்சமாம் - ஒன்று யூதர்கள், அடுத்தது யப்பானியர்கள் மற்றையது யாழ்ப்பாண சமூகம். உண்மையில் இதனை எழுதியவர் யாரென்று இன்னும் நான் அறியவில்லை. ஆனால் அந்த அரசியல் வடிவேலுவை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்றே ஆசை மேலோங்குகின்றது.
குறித்த நபரை அறிந்தவர்கள் தயவு செய்து சொல்லுங்கள். இணைய ஊடகங்களில் அரசியல் ஆய்வுகள் என்னும் தலைப்பில் வெளிவரும் விடயங்களை பார்த்தால், இத்தனை அறிவாளிகள் இருந்தும் ஏன் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் அழிவுப் பாதையில் சென்றார் என்னும் கேள்வியே நம்மை தொந்தரவு செய்யும்.
ஈழத் தமிழர்கள்
இராணுவ ஆய்வாளர்கள், படைத்துறை ஆய்வாளர்கள் என்னும் அடையாளங்களுடன் வருபவர்களின் கருத்துக்களை அவதானித்தால், உலகின் தலைசிறந்த உளவுத்துறைகளான சிஜ.ஏ. மொசாட், எம்.ஜ-6, றோ போன்றவைகள் அனைத்தும், இவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் திட்டங்களை வகுக்கின்றார்கள் போலும். மனச் சோர்விற்குள்ளாகியிருப்பவர்கள் நகைச் சுவைகளை ரசிப்பதுண்டு, அவ்வாறானவர்கள் இப்படியான ஆய்வுகளை கட்டாயம் கேட்க வேண்டும்.
இவ்வாறானவர்களது இன்னொரு பெரிய கண்டுபிடிப்புத்தான் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்பதற்கு பின்னால் பெரிய சதியொன்று இருக்கின்றதாம்.
யாரோ பின்னுக்கிருந்து இயக்குகின்றார்களாம். அதாவது, ஈழத் தமிழ் புலம்பெயர் சமூகம் ஒரு சக்தியாக எழுச்சி கொள்வதை தடுக்க வேண்டிய தேவை சில உளவுத்துறைகளுக்குண்டாம். அதனால்தான் இவ்வாறான விடயங்கள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார்.
உலகில் பல பாகங்களிலும், இராணுவத்திற்கு எதிரான போர்களில் கெரில்லா இயக்கத் தலைவர்கள் பலர் இறந்திருக்கின்றார்கள். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரும் அப்படித்தான் தன்னால் முடிந்த வரையில் சண்டையிட்டு இறந்தார்.
புலம்பெயர் சமூகம்
பின்னர் அவரது உடல் காண்பிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்டு விடயத்தை முடித்திருந்தால், அதன் பின்னர் ஏற்பட்ட தேவையற்ற சர்ச்சைகளை, உள்ளக அடிபிடிகளை தவிர்த்திருக்கலாம். இதிலுள்ள உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் நேற்றுத்தான் என்னோடு பேசினார் என்று பழ நெடுமாறன் கூறிக்கொண்டிருந்தது.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டே இப்படியான பொய்களை கூறியவர்கள், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் உயிரோடு இருக்கும் போது எப்படியான புனை கதைகளையெல்லாம் சொல்லியிருப்பார்கள் - தம்பி விடக் கூடாது, நாங்கள் இருக்கின்றோம், புதுடில்லியை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றுதானே உசுப்பியேற்றியிருப்பார்கள். 2009இற்கு பின்னரான அரசியல் ஒரு நகைச்சு சுவைக் காட்சியாவே நகர்ந்தது.
உண்மையை மூடி மறைத்து, இருக்கின்றார் - வருவார் - நேற்றுத்தான் பேசியவர் - அவரது மகள் தலைமை தாங்க வருகின்றார் என்றெல்லாம் கூறியதால்தானே இந்த விடயம் இந்தளவிற்குச் சிக்கலானது. இதில் எங்கு உளவுத் துறைகள் இருக்கின்றன? அரசியல் அறிவை விடுவோம் - அதற்கு கொஞ்சமாவது படிக்க வேண்டும், பின்னர் சிந்திக்க வேண்டும்.
ஆனால் அனைவருக்கும் மூளை இருக்கின்றதல்லவா, உண்மையிலேயே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இருக்கின்றார் என்னும் ஒரு கதை இலங்கையின் உளவுத் துறைக்கு தேவைப்பட்டிருந்தால் - அல்லது வேறு ஏதேனும் உளவுத் துறைகளுக்கு தேவைப்பட்டிருந்தால், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் இறுதி நாட்கள் பற்றி தகவல்களை மறைத்து, அவரைத் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்னும் கதையுடனல்லவா யுத்தத்தை முடித்திருப்பார்கள்.
எதற்காக அவரது உடலைக் காண்பித்து உண்மையை சொல்ல வேண்டும்? இதிலிருந்தே புரிந்திருக்க வேண்டுமே - இலங்கையின் வெற்றிக்கு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் இறப்பு பற்றி உண்மையே தேவைப்பட்டது, அவர் இருக்கின்றார் என்னும் பொய் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. சதிகளுக்குத்தான் எப்போதும் பொய் தேவைப்படும்.
காலம் கடந்தாயினும் தாங்கள் தவறான பாதையில் செல்கின்றோம், சொந்த மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்னும் குற்றவுணர்விற்கு ஆட்பட்ட சிலர், அண்மையில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் இறப்பை அறிவித்து, அவருக்கான இறுதி நிகழ்வை செய்திருந்தனர். பின்னர் அது பற்றியும் சதிக் கதைகள் புனையப்பட்டது.
எல்லாவற்றுக்குப் பின்னாலும் சதிகள்தான் என்றால் புலம்பெயர்ந்தவர்கள் நல்லூர் ஆலய வழிபாடுகளுக்காக பல்லாயிரக்க கணக்கில் இலங்கை வந்து செல்வதும் கூட சதியாகத்தானே இருக்க வேண்டும்! ஏனெனில் அவர்களது வருகையால், இலங்கையின் அன்னியச் செலவாணி கையிருப்பு அதிகரிக்கின்றதல்லவா - எனவே நல்லூர் ஆலய வழிபாட்டில் பங்குகொண்டவர்கள் அனைவரும் துரோகிகள் என்றல்லாவா கணக்கை முடிக்க வேண்டிவரும். தமிழ் சமூகம் தங்களின் பொதுவான அறிதலின் அடிப்படையில் விடயங்கள் ஒவ்வொன்றையும் சீர்தூக்கிப் பார்க்கப் பழக வேண்டும்.
மேற்குலக தலைநகரங்கள்
ஒரு சமூகம் தான் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர முடியாமல் இருக்கின்றது என்றால், அது ஒரு அறிவுபூர்வமான சமூகமாக இருக்கவே முடியாது. இந்தக் கட்டுரையாளர் முன்னரும் எழுத்தியிருக்கின்றார். அதனை மீளவும் சொல்வதாயின். ஈழத் தமிழ் மத்தியதரவர்க்கம் தனிமனிதர்களாக ஆற்றலுள்ளவர்கள். தங்களின் குடும்பம், எதிர்காலம் தொடர்பில் நன்கு கணக்குப் போட்டு செயற்படும் ஆற்றலுள்ளவர்கள்.
இந்த தனிநபர் கணக்கினால்தான், இன்று மேற்குலக தலைநகரங்கள் தோறும் சொந்த வீடுகளில் வாழ்கின்றார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னர், ஆங்கிலத்தில் சில வார்த்தைகளை உச்சரிக்கக் கூடத் தெரியாமல் மேற்குலகின் வீதிகளை விழிபிதுங்கி நின்றவர்கள், இன்றோ, பணக்கார நாடுகளின் தலைநகரங்களில் இரண்டு, மூன்று வீடுகளுடன் இருக்கின்றனர் என்றால், அதற்கு நிச்சயம் கெட்டித்தனம் தேவை ஆனால் இந்தத் கெட்டித்தனம் ஒரு கூட்டுக் கெட்டித்தனமாக இன்றுவரையில் வளர்சியுறவில்லை.
அது வளர்ச்சியுறும் என்னும் நம்பிக்கை இந்தக் கட்டுரையாளருக்கு இல்லை ஏனெனில் கடந்த பதினாறு வருடங்களில் அதற்கான சிறிய அறிகுறியைக் கூட காண முடியவில்லை. ஒரு அறிவுச் சமூகம் எப்படியிருக்கும்? அது பொய்களை எதிர்க்கும் - யதார்த்தத்தின் பக்கமாகவே எப்போதும் நிற்கும் - போலித்தனங்களை கண்டு கோபமடையும் - எதிரி- துரோகி- தியாகி என்னும் சொற்களுடன் தனது ஆற்றலை வீணாக்காது.
ஏனெனில் அரசியலில் நிரந்தர எதிரிகள், நிரந்தர நண்பர்கள் என்று எவரும் இல்லை – தங்களுக்கு தலைமை தாங்குபவர்களை சாதிகளால், ஊர்களால் அளவிடாது மாறாக அவர்களை ஆற்றலால், ஆளுமையால் நிறுத்துப் பார்க்கும் - ஏனெனில் ஒரு மனிதன் அவனது செயல்களால் அளவிடப்பட வேண்டுமேயொழிய அவனது பிறப்பினாரல் அல்ல (கௌடில்யர்) – ஒரு அறிவுச் சமூகமானது, எப்போதுமே தீர்மானமொன்றை மேற்கொள்ளும் போது, கடந்த காலத்தை உற்று நோக்கும் - கடந்த காலத்தின் படிப்பினைகளிலிருந்தே நிகழ்காலத்தை அளவிடும் - ஏனெனில் ஒரு சமூகம் நிகழ்காலத்தை எவ்வாறு கையாளுகின்றது என்பதிலிருந்துதான் அதற்கான எதிர்காலத்தை அதனால் ஆக்கிக் கொள்ள முடியும்.
அடிப்படையில் ஒரு சமூகத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் அதன் தீர்மானங்களினாலேயே நிகழ்கின்றது – அதாவது தீதும் நன்றும் பிறர் தருவதில்லை. ஈழத் தமிழ் அரசியல் வரலாறு முழுவதிலுமான தோல்விக்கு யார் காரணம்? ஒவ்வொரு காலகட்டங்களிலும் அரசியலை தங்களின் தோள் மீது சுமந்தவர்களே காரணம். வேறு எவரும் அல்லர் - இந்த அடிப்படையில் சிந்தித்தால் நமக்கு எவரும் எதிரியல்ல – ஒவ்வொருவரும் அவர்களது நலன்களுக்காக செயற்படும் உலகில், நமது நலன்களுக்காக, நாம் எவ்வாறு செயற்படப் போகின்றோம் என்னும் கேள்வி மட்டுமே நமக்கு முன்னால் இருக்கும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 24 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





விஜய்யின் மறைந்த தங்கை வித்யா, இப்போது உயிருடன் இருந்தால் இப்படி தான் இருப்பாரா? வீடியோ இதோ Cineulagam
