யாழில் எதிர்ப்பின் மத்தியில் ஊர் வீதியை போராடி மீட்ட பொதுமக்கள் (Photos)
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை தனியார் ஒருவரிடம் இருந்து மீட்டு மக்களின் பாவனைக்கு வழங்குமாறு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச சபைக்கு முன்னால் நேற்றைய தினம்(12.05.2023) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான தாவளை இயற்றாலை ஊரெல்லை வீதியையும் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான குளத்தையும் அபகரித்து தனியார் ஒருவர் வேலி அமைத்து கிராம மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த வீதியை மீட்டுத்தருமாறு பிரதேச சபையிடம் பல தடவை முறையிட்டும் தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் பிரதேச சபையினை முற்றிகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து போராட்ட களத்திற்கு வருகை தந்த கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியடம் வீதியை உடனடியாக மக்கள் பயன்படுத்தக்கூடியவாறு மீட்டுத்தந்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் உடனடி நடவடிக்கை
இதன்போது வீதியை சுற்றியுள்ள முட்கம்பி வேலிகளை உடனடியாக அகற்றுவதற்கு பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொலிஸாரின் பாதுகாப்போடு வீதியை அபகரித்து போடப்பட்டிருந்த சுமார் 100 மீற்றருக்கும் அதிகமான முட்கம்பி வேலி அகற்றப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள், முன்னாள் உபதவிசாளர் செ.மயூரன்,
முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், முன்னாள் பிரதேச சபை
உறுப்பினர் திலகராணி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.











