அரச ஊழியர்கள் வாக்குகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்: ராமேஷ்வரன் கோரிக்கை
தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், அரச ஊழியர்கள் தமது வாக்குகளை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா - டயகம பகுதியில் இன்று (02.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ இரு வருடங்களுக்கு முன்னர் நாடு எப்படி இருந்தது? வரிசை யுகம் தோற்றம் பெற்றது.
பெரும் துயரம்
நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டனர். சிலர் பட்டினியில்கூட வாடினார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்ற பின்னர் வரிசை யுகத்துக்கு முடிவுகட்டி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவந்துள்ளார்.
மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும் என எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார்.
அதற்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. வீட்டுப் பிரச்சினைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வி சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல்
இதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
ஒரு வருட காலப்பகுதிக்குள் அவர் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளார். எனவே, அவருக்கு இன்னும் ஐந்தாண்டுகள் வழங்கினால் நாடும், மக்களும் நிச்சயம் முன்னேறுவார்கள்.
ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கிலேயே சிலர் போலியான, நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கிவருகின்றனர். இதற்கு மக்கள் ஏமாறக்கூடாது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |