இலங்கையின் நிதி அமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநரின் அறிவுறுத்தல்
இலங்கையின் நிதித்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியும் புத்தாக்கங்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றாலும், நாட்டின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படக்கூடாது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற Sri Lanka FinTech Festival 2026 நிகழ்வில் உரையாற்றிய அவர், நிதி தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணையவழித் தாக்குதல்கள், மோசடிகள், தரவு கசிவுகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான புதிய சவால்களும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நுகர்வோர் பாதுகாப்பு
எனவே, புத்தாக்கங்களையும் போட்டித்தன்மையையும் ஊக்குவிக்கும் அதேவேளை, வலுவான கண்காணிப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நிதித்துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பான முறையில் பரிசோதிப்பதற்காக மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் FinTech Regulatory Sandbox திட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
புத்தாக்கம், போட்டித்தன்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை வரவேற்கும் அதேவேளை, நிதி ஸ்திரத்தன்மை, நம்பிக்கை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.