2027 ஆம் ஆண்டு முதல் பாடசாலை கால அட்டவணையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான சுற்றறிக்கை
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அமைய, பாடசாலை நேர அட்டவணைகளை தயாரிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய பாடத்திட்ட சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்
அத்துடன், 2027 ஆம் ஆண்டில் 2 ஆம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 3 ஆம் மற்றும் 7 ஆம் தரங்களுக்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

2029 ஆம் ஆண்டில் 4, 8 மற்றும் 10 ஆம் தரங்களுக்கும், 2030 ஆம் ஆண்டில் 5, 9 மற்றும் 11 ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
உயர்தர இரண்டாம் தரங்களுக்கான புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2031 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பாடசாலை நேர அட்டவணை மாற்றம்
இந்த புதிய பாடத்திட்டத்தைக் கற்கும் மாணவர்கள் முதன்முறையாக 2033 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும்போது சில தரங்களுக்கு, அதாவது 2027 ஆம் ஆண்டில் 3, 4 மற்றும் 5 ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 4 மற்றும் 5 ஆம் தரங்களுக்கும், 2029 ஆம் ஆண்டில் 5 ஆம் தரத்திற்கும் பழைய பாடத்திட்டமே நடைமுறையில் இருக்கும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் போது, அந்தந்த ஆண்டுகளில் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கருத்திற்கொண்டு பாடசாலை நேர அட்டவணைகளை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.