தேர்தலில் ட்ரம்பிற்கு ஏற்பட்ட நெருக்கடி.. இஸ்ரேல் குறித்து அதிரடி தீர்மானம்
இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ஆண்டிற்கு 4 பில்லியன் டொலர் நிதியுதவியை இந்த ஆண்டுடன் நிறுத்துவதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
எனினும், இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை தொடர்ந்து நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் இலக்கு
இஸ்ரேலுக்கான இராணுவ உதவித் திட்டம் 2028 வரை நடைமுறையில் உள்ள நிலையில், ட்ரம்பின் இந்தத் திடீர் அறிவிப்பு தேர்தலை இலக்காகக் கொண்ட அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகின்றது.

இடதுசாரி ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்தும் "மோசமான அரசியல் குற்றச்சாட்டுகளை" முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ட்ரம்ப், இஸ்ரேலுக்கு இனி இந்த நிதியுதவி தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஊடகங்கள் வாயிலாக இத்தகைய முக்கிய பாதுகாப்பு முடிவுகளை வெளியிடுவது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்றும், நெதன்யாகுவை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் கடுமையாக விமர்சித்துள்ளார்.
காசா போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க மக்களிடையே, முக்கியமாக ஜனநாயகக் கட்சியினரிடையே இஸ்ரேலுக்கான ஆதரவு பெருமளவில் குறைந்துள்ள பின்னணியிலேயே டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.