1983ஆம் ஆண்டு இனக்கலவரம் மீண்டும் இலங்கையின் தீவிர அரசியலுக்குள்..!
இலங்கையின் மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு உடனடிக் காரணமாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படும் 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் (கறுப்பு ஜூலை), மீண்டும் அரசியல் அரங்கில் தீவிரம் பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற விசாரணை ஒன்றை நடத்துமாறு அரசாங்க கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரேரணையின் முக்கிய நோக்கம்
நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில், அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஆனந்த விஜேபால உள்ளிட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதே இந்தப் பிரேரணையின் நோக்கமாகும்.

1983ஆம் ஆண்டு சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு, அநீதிக்கு உள்ளான அனைத்து மக்களுக்கும் நியாயமான நிவாரணம் அல்லது கண்ணியமான தீர்வை வழங்குவது அரசின் பொறுப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரேரணையில் வலியுறுத்தியுள்ளனர்.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவம் நாட்டை பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பல தசாப்தங்களுக்கு பின்னோக்கித் தள்ளியதாகவும், இதன் விளைவாக ஆயிரக்கணக்கான பெறுமதியான உயிர்கள் இழக்கப்பட்டதுடன், பாரிய சொத்துச் சேதங்களும் ஏற்பட்டதாகவும் அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உடல் ரீதியான சேதங்களை விடவும் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட பதற்றம், அச்சம் மற்றும் சந்தேகமே நாட்டுக்கு ஏற்பட்ட மிகப் பாரதூரமான பாதிப்பாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட உளவியல் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகள் இதுவரை முறையாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தலைமை தாங்கிய நபர்கள்
எதிர்காலத்தில் இவ்வாறான இனவாத மற்றும் நெருக்கடியான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக வலுவான சட்ட, சமூக மற்றும் நல்லிணக்க பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் பல்வேறு இனக்குழுக்களுக்கிடையில் நிலவும் நம்பிக்கை மற்றும் நல்லுறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு சம்பவத்திற்குக் காரணமான சூழ்நிலைகள் மற்றும் அந்த அழிவுச் செயல்களுக்கு தலைமை தாங்கிய நபர்கள் யார் என்பதையும் கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
எனினும், அண்மையில் நாடாளுமன்ற விவாதமொன்றில் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 1983 ஜூலை கலவரத்தை மாத்திரம் மையப்படுத்துவதற்குப் பதிலாக, தேசிய நல்லிணக்கம் தொடர்பில் ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதே பொருத்தமானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட பிரேரணையைக்கூட விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் என்றும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டால் சபாநாயகர் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முடியும் என்றும் இலங்கையின் ஆங்கில செய்தித் தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பிரேரணையில் அமைச்சர்கள் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனந்த விஜேபால; பிரதி அமைச்சர்கள் சுனில் வட்டகல, எரங்க குணசேகர, கமகெதர திஸாநாயக்க, சுகத் திலகரத்ன உள்ளிட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
அவர்களில் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, நிஷாந்த பெரேரா, கே. இளங்குமரன், கந்தசாமி பிரபு, ரவீந்திர பண்டார, பாஸ்மின் ஷரீப், செல்லத்தம்பி திலகநாதன், பாக்யா ஸ்ரீ ஹேரத், ரியாஸ் பாரூக், முனீர் முலாபர், நிலாந்தி கொட்டஹச்சி, முஹம்மத் பைசல், அசோக சபுமல் ரண்வல, நிஹால் அபேசிங்க, சேன நாணயக்கார உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.