மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு: பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரையில் 65 நோயாளிகள் இனம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், அதில் செங்கலடியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் மரணம் அடைந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை (29.04.2023) முன்னெடுக்கப்பட்ட டெங்கு பரிசோதனை நிகழ்வில்
கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேட அதிரடி டெங்கு பரிசோதனை
டெங்கு நோயின் தாக்கத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மாவட்டத்தின் முதன்மையான இடத்தை பெறுகின்றது. இப்பிரிவில் 107 பேர் டெங்கு நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளனர்.
அதிலும் கொக்குவில் பிரதேசத்தில் ஒரே வீட்டில் நேற்று நான்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.
வெட்டுக்காடு, இருதயபுரம் ஆகிய கிராமங்களிலும் மட்டக்களப்பு நகர வைத்திய சுகாதார பிரிவில் 35 வீதமானவர்கள் இப்பிரதேசத்திலேயே இனம் காணப்பட்டுள்ளனர்.
எனவே இதனை அடுத்து மண்முனை வடக்கு பிரதேச செயலப் பிரிவில் விசேட அதிரடி டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதன்போது கொக்குவில் பிரதேசத்தில் பொதுமக்களின் வீடுகள், கிணறுகள், சுற்றுப்புற சூழல்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு உரிய சுகாதார முறையில் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
இவ்விசேட பரிசோதனையின் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் உட்பட பொது
சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதனைகள், சிவில் அமைப்பின்
பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.