இலங்கையில் 42 பகுதிகள் டெங்கு அதியுயர் வலயங்களாக அடையாளம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் படி, டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் நிமல்கா பன்னிலஹெட்டி நேற்று (26) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
டெங்கு வேகமாக பரவிவருவதால் இவ்வருடம் இதுவரை பதினைந்து டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த நான்கு மாதங்களில், நாட்டில் 28,444 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
அதியுயர் வலயங்கள்
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவி வருவதுடன், இந்நிலைமையின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 42 டெங்கு அதியுயர் வலயங்கள் பெயரிடப்பட்டுள்ளன.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வாரத்திற்கு சுமார் ஐந்நூறு டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததாகவும் இதன்போது வாரத்திற்கு1500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் ஐம்பது வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,கொழும்பு மாநகர சபை தவிர்ந்த கொழும்பு மாவட்டத்தின் ஏனைய 18 சுகாதார பிரிவுகளிலும் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையில் நுளம்புகள் பெருகும் இடங்களை நடத்துவோருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்படும் எனவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.