ஆப்கானிஸ்தானில் பாடசாலை அருகே பதிவான வெடிப்பு சம்பவம் : 10 மாணவர்கள் பலி - 110 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 110 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குனார் மாகாணத்தின் தலைநகரான அசாதாபாத் நகரிலுள்ள அன்டர்சீர் பகுதியில் நேற்று(28.11.2026) காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில், தலிபான் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சின் பேச்சாளர் அப்துல் மத்தின் கானி தெரிவிக்கையில்,
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி அருகிலுள்ள சுரங்கத் தொழில் நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருள் களஞ்சியத்தில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாகவே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஷகாய் நடுநிலைப் பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் பாறைகளை வெடிக்கச் செய்வதற்கும் சுரங்கத் தொழிலுக்கும் பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக மாகாண தகவல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
10 மாணவர்கள் பலி
காயமடைந்தவர்களில் சுமார் 15 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனையவர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்பினால் பாடசாலையின் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளதுடன், உடைந்த கண்ணாடிகள், சிதறிக் கிடக்கும் பொருட்கள், கைவிடப்பட்ட காலணிகள் மற்றும் மாணவர்களின் புத்தகப் பைகள் உள்ளிட்டவை காணப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
காயமடைந்த சிறுவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் சுரங்கத் தொழில் முக்கியமான பொருளாதாரத் துறையாக இருந்தாலும், பாதுகாப்புத் தரநிலைகள் போதியளவில் இல்லாததால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.