பணவீக்கம் - வறுமையால் மக்கள் வாழ முடியாத நிலை! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பகிரங்க எச்சரிக்கை
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களால் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பணவீக்கம் 9 சதவீதமாக இருக்கக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடும் வேளையில், நாட்டில் வறுமை விகிதம் 60 சதவீதம் என உலக வங்கி தெரிவித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சூழலில் சமூக வலுவூட்டலுக்கு மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்தி, நவீன யுகத்துக்குப் பொருத்தமான அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் அனைத்துத் துறைகளிலும், ஒவ்வொரு கிராமம், நகரம் மற்றும் மாகாணத்திலும் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழக்கமான சட்டகத்துக்குள் முடங்கிவிடாமல் புதிய முறையில் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் 17ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவு நிகழ்வும் நேற்று (27.11.2026) கொழும்பு, மகாவெலி கேந்திர கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள்
2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் முடிவடைவதால், ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக நாட்டின் தேசிய உற்பத்தி, கைத்தொழில், சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் கடனைச் செலுத்த முடியாமல் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடி நிலையை அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசு கையெழுத்திட்ட சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடும் மக்களுக்கு எதிரான ஒன்றாக உள்ளது என்று தெரிவித்த அவர், இந்தச் சூத்திரத்தின்படி பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது கடன் நிவாரணம் குறையும் கடன் பொறியில் நாடு சிக்கியுள்ளது என்றும் கூறினார். தற்போதைய இணக்கப்பாட்டை மாற்றுவதாகக் கூறினாலும், அரசு அதனை அப்படியே நடைமுறைப்படுத்துகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அரச மற்றும் தேசியக் கொள்கைகளை உருவாக்கி, அவற்றை அடித்தள மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பை நாடு முழுவதிலும் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் நிறைவேற்றுகின்றனர் என்றும், அவர்களின் சேவை உயர்ந்த மதிப்புக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்பு தொடர்பான விடயங்களுக்குத் தீர்வு காணத் தமது தரப்பு ஆதரவு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு நெருக்கமான அரச சேவையான கிராம உத்தியோகத்தர் சேவைக்குப் பொருத்தமான சம்பள அளவுத்திட்டம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அரச சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொண்ட சம்பள அளவுத்திட்டத்தை வழங்க அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
எரிபொருள் கொடுப்பனவு

தமது ஆட்சியில் இந்தப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், குழு அங்கீகரித்த 20 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவு கிடைப்பதில்லை என்றும், 2027 ஏப்ரல் முதல் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு போதுமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு அனர்த்தத்தின்போதும், அபிவிருத்தி மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின்போதும் கிராம உத்தியோகத்தர்கள் ஆற்றும் பணியைப் பாராட்டிய அவர், இத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள் தொடர்பான நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களில் ஒருவராக, சுற்றாடலைப் பாதுகாக்கும் நிலைபேறான அபிவிருத்திக்கான கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் கிராம உத்தியோகத்தர்களுக்கு விசேட பங்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எல்நினோ, லாநினா காரணமாக வானிலை மற்றும் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிணறன என்றும், வறட்சி போலவே பெருமழை உள்ளிட்ட அபாயங்களும் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதனால் பாதிப்புக்குள்ளாவது பொதுமக்கள் என்பதால், அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அவர், பேரழிவு ஏற்பட்ட பின்னர் பதிலளிப்பதற்குப் பதிலாக, முன்கூட்டியே கணித்து அதன் விளைவுகளைக் குறைக்கும் முன்னாயத்தத் திட்டம் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.