கடல் கொந்தளிப்பு அதிகரிப்பு : சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைப் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வழமைக்கு மாறாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக தாளையடி கடற்கரைப் பகுதியில் கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்துள்ளதுடன், கடற்கரைப் பகுதியும் வழமைக்கு மாறான தோற்றத்தில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியிடங்களைச் சேர்ந்த மக்கள் தாளையடி கடற்கரைக்கு வருகை தருவது வழக்கம் என்பதால் அவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
இந்த நிலையில், இன்று(29.11.2026) ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தற்போதைய கடல் நிலைமையைக் கருத்தில் கொண்டு கடலுக்குள் இறங்குவதையும் நீராடுவதையும் தவிர்த்து, தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் இவ்வாறான சூழலில் சிறிய கவனக்குறைவுகூட பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சுற்றுலா மகிழ்ச்சியை விட உயிர்ப் பாதுகாப்பே முக்கியம் என்பதால், தாளையடி கடற்கரைக்கு வருகை தருவோர் கடலின் தற்போதைய நிலைமையை மதித்து பாதுகாப்புடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


