பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினத் தலைப்புகள்
பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினத் தலைப்புகள் இன்று (28) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான செலவினத் தலைப்புகள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டன.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் ஆறாவது நாளான இன்று, பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் (103, 222 முதல் 224 வரை, 304 மற்றும் 325) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, பின்னர் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டன.
செலவினத் திருத்தங்கள்
குழுநிலை விவாதத்தைத் தொடர்ந்து, இன்று மாலை சுமார் 6.20 மணியளவில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாதுகாப்பு அமைச்சின் 103ஆம் செலவினத் தலைப்புக்கு வாக்கெடுப்பு கோரினார்.

இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 85 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 4 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்படி, 81 மேலதிக வாக்குகளால் 103ஆம் செலவினத் தலைப்பு நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் 225ஆம் செலவினத் தலைப்பு திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், ஏனைய செலவினத் தலைப்புகள் (189, 226 மற்றும் 320) வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டன.