யுத்தத்தின் பின் உயர்தர மாணவிக்கு நேர்ந்த அவலம்.. 15 வருடங்களுக்கு பிறகு வெளியான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
யுத்தத்தின் பின்னர் அகதி முகாமில் தங்கியிருந்த 17 வயது மாணவியொருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
உயர்தரப் (A-Level) பரீட்சைக்குத் தோற்றும் நோக்கில் உறவினரான குரு ஒருவரின் இல்லத்திற்குச் சென்ற குறித்த மாணவி துஷ்பிரயோகத்திற்குள்ளான வழக்கில், தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதியான நித்தியானந்தன் மோகன்ராஜ் என்ற இந்துக் குரு தாக்கல் செய்த மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதன்படி, வவுனியா மேல் நீதிமன்றம் விதித்த தண்டனை மற்றும் அபராதங்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
15 வருட விசாரணை
இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. அப்போது வவுனியா மெனிக் பார்ம் அகதி முகாமில் தங்கியிருந்த மாணவி, தனது கல்வித் தொடர்ச்சிக்காக முல்லைத்தீவு உதயார்கட்டு பகுதியில் உள்ள உறவினரான பிரதிவாதியின் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

2011 நவம்பர் 11ஆம் திகதியளவில் அந்த வீட்டிற்குள்ளேயே பிரதிவாதி அவரைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து உயர்தரப் பரீட்சையையும் கைவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவி மீண்டும் அகதி முகாமிற்குத் திரும்பியுள்ளார்.
சுமார் ஆறு மாதங்களின் பின்னர் அவர் கர்ப்பமுற்றிருப்பது தெரியவந்தபோது, பொலிஸ் விசாரணையில் குறித்த குரு தம்மைத் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதிவாதி சம்மதத்துடனேயே இச்சம்பவம் நடந்ததாகக் கூறிய போதிலும், டி.என்.ஏ (DNA) பரிசோதனை மூலம் அக்குழந்தையின் தந்தை பிரதிவாதிதான் என்பது உறுதியானது.
மாணவியின் மனநிலை
இதனைத் தொடர்ந்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில், பிரதிவாதிக்கு 17 வருட கடூழியச் சிறைத் தண்டனை, 5,000 ரூபா அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 300,000 ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.

மேல் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நீதியரசர்களான அமல் ரணராஜ மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
நீதியரசர் அமல் ரணராஜவின் உடன்பாட்டுடன் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் சுமுது பிரேமச்சந்திர, பாலியல் குற்றங்களில் சம்மதம் என்பது எவ்வாறு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்துத் தெளிவான சட்ட விளக்கத்தை முன்வைத்தார்.
பயம் அல்லது அதிர்ச்சியின் காரணமாக அமைதியாக இருப்பதோ பணிந்து போவதோ சம்மதமாகக் கருதப்பட முடியாது என்றும், பிரதிவாதியின் மத அதிகாரம், அச்சுறுத்தல்கள் மற்றும் யுத்தச் சூழலால் ஏற்பட்ட அச்சத்திற்கு மத்தியில் பாதிக்கப்பட்டவர் செய்வதறியாது நின்றமை தெளிவாகிறது என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. முறைப்பாடு அளிக்கத் தாமதமானது என்ற பிரதிவாதியின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது.
நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
சமூக அவமானம் அல்லது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு அளிக்கத் தாமதிப்பது சாதாரணமானது எனவும், பாதிக்கப்பட்டவரின் சாட்சியம் நம்பகமானதாக இருந்தால் மேலதிக ஆதாரங்கள் எப்போதும் அவசியமில்லை எனவும், இந்த வழக்கில் டி.என்.ஏ அறிக்கை மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதியரசர் குறிப்பிட்டார்.

சம்பவத்தின் பின்னர் மாணவி வீட்டை விட்டு வெளியேறி உயர்தரப் பரீட்சையையும் கைவிட்டது, சம்மதத்துடன் நடந்ததாகக் கூறப்படும் பிரதிவாதியின் வாதத்தை முற்றாக மறுக்கும் பலமான ஆதாரமாகும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிக்கு முன்னைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லாதமையும் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதையும் கருத்தில் கொண்டு, 17 வருட சிறைத் தண்டனையை 13 வருடங்களாகக் குறைத்து உத்தரவிட்டது.
இந்தத் தண்டனை அவர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணையில் பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொடவும், சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவும் முன்னிலையாகினர்.