நிசப்தங்களை உடைத்து அலறிய தொலைபேசியில் அதிர்ச்சித் தகவல்! அன்று உயிர் இருந்தும் உறைந்து போன நாம் (Video)
அன்று காலை 7 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி, அனைவரும் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டோம். அன்று பண்டிகை நாள் என்பதால் மிக அதிகமானோர் ஆலயத்திற்கு வருகைத் தந்திருந்தனர்.
அதன் பின்னர், காலை 9 மணியளவில் திருப்பலி முடிந்தவுடன், எங்களது அருட்தந்தை எங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதேபோல அருட்தந்தை மேடையில் இருந்த ஒலிவாங்கியை கையில் எடுத்தவுடன் அதேபோன்றதொரு வாழ்த்தினை எதிர்பார்த்து நாங்கள் அனைவரும் அமைதியாக எங்களது இருப்பிடங்களில் அமர்ந்தோம்.
ஆனால், ஒலிவாங்கியை கையிலெடுத்த அருட்தந்தை, “ நான் உங்களுக்கு மிகப் பெரிய ஒரு வருத்தத்திற்குரிய செய்தியைச் சொல்லப் போகின்றேன்” என்றார். அவரது குரலில் தடுமாற்றம் இருந்ததை அங்கிருந்த அனைவரும் உணர்ந்தோம். தொடர்ந்து பேச ஆரம்பித்த அருட்தந்தை, இன்று நாங்கள் கிறிஸ்த்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் அதே சமயம், கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயம் உள்ளிட்ட மூன்று ஆலயங்களில் பத்து நிமிடங்களுக்கு முன்னர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
எங்களது, ஆலயத்தின் உள் தொலைபேசி யாரும் பாவிப்பதில்லை, திருப்பலி நடக்கும் நேரங்களில் தொலைபேசியை நிறுத்தி வைத்துவிடுவோம் என்ற காரணத்தினால் அருட்தந்தை மூலமாக கேட்டறிந்த இந்த செய்தி மிகப் பெரிய இடியாக எங்களது காதுகளில் ஒலித்தது.
உடனே, பதறிய பலர் தங்களது தொலைபேசிகளை எடுத்து உண்மை நிலரவத்தை அறிந்து கொள்ள முற்பட்டனர். பலர் தங்களது உறவுகளுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு விபரம் அறிந்தனர். தலைநகரில் உள்ள மிகப் பிரதானமான ஒரு ஆலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாலும், எங்களது ஊரில் இருக்கும் பலர் தலைநகரில் பணி புரிவதாலும், அவர்களது உறவினர்கள் பதறிக் கொண்டு அழைப்பினை ஏற்படுத்தி பாதிப்பு நிலவரங்கள் குறித்து அறிந்து கொண்டனர்.
ஆலயத்தில் தொடர்ந்து அரை மணி நேரம் பதற்றமான சூழல் நிலவியது, நாங்கள் அமர்ந்திருந்த வரிசையில் இருந்து ஐந்து வரிசைகள் பின்தள்ளி அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியின் அலறல் சத்தமும் அடுத்து அவர் மயங்கி விழுந்ததும் மேலும் பீதியை ஏற்படுத்தியது.
சிறிது நேரத்தின் பின்னரே அறிந்து கொண்டோம் அந்த குண்டுத் தாக்குதலில் அந்தப் பெண்ணின் மூத்த மகனும் சிக்கிக் கொண்டார், மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார் என்பதை..
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள்
இப்படித்தான், மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை அறிந்து கொண்டோம்.
2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அத்தனை இலகுவில் இலங்கையர்களும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினரும் மறந்திட முடியாத ஒரு துயர வடு. இன்றுடன் நான்கு வருடங்கள் கடந்து விட்டன...
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் சிலவற்றிலும், காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் இந்த குண்டுத் தாக்குதல்கள் நடந்தன.
இதில், 9 வெளிநாட்டவர்கள், 3 பொலிஸார் உள்ளிட்ட குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்ஸ்பரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவு விடுதிகளில் வெடித்தன.
தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது கிறித்தவர்கள் உயிர்த்த ஞாயிறு திருப்பலிப் பூசைகளில் கலந்து கொண்டிருந்தார்கள். உணவு விடுதிகளில் காலை உணவை அருந்துவதற்காகப் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், உள்நாட்டினரும் கூடியிருந்த நிலையில், பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுத்துவதற்காகத் இத்தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டிருந்தன. அனைத்துத் தாக்குதல்களும் தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்டன.
முதலாவது தாக்குதல் நீர்கொழும்பு, புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்றது. இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இரண்டாவது தாக்குதல் கொழும்பு, புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
மூன்றாவது தாக்குதல் மட்டக்களப்பு நகரில் சீர்திருத்தத் திருச்சபையின் சீயோன் தேவாலயம் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.
சங்கிரி-லா விடுதி, சின்னமன் கிராண்ட் விடுதி, கிங்ஸ்பரி விடுதி ஆகியவை தாக்குதல்களுக்குள்ளான மூன்று 5 நட்சத்திர தங்கும் விடுதிகள் ஆகும். இவை கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்துள்ளன.
சங்கிரி-லா விடுதியில் காலை 08:57 மணிக்கு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதியின் மூன்றாம் தளத்திலுள்ள "டேபிள் ஒன்" என்ற உணவகத்தில் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருந்த காலை உணவு நேரத்தில் தாக்குதல் நடந்தது. இருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இருவரும் முதல் நாள் அங்கு வந்து தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் உணவகத்திலும், மற்றவர் மூன்றாம் மாடியின் வேறோர் இடத்திலும் குண்டுகளை வெடிக்க வைத்தனர் என்று கூறப்படுகின்றது.
சின்னமன் கிராண்ட் விடுதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அவ்விடுதியில் பொய்யான பெயரில் தான் ஒரு வர்த்தகர் எனக் கூறித் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இங்குள்ள "டாப்பிரபேன் உணவகத்தில்" காலை உணவுக்காக வரிசையில் நின்றவர்களுடன் இணைந்து இவரும் நின்று குண்டை வெடிக்க வைத்துள்ளார். இத்தாக்குதலில் அங்கு நின்றிருந்த உணவக முகாமையாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
கொழும்பிலுள்ள உலக வரத்தக மையத்துக்கு அருகிலுள்ள கிங்ஸ்பரி நட்சத்திர விடுதியில் மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றது.
பிற்பகல் வேளையில், கொழும்பின் தெற்குப் புறநகரான தெகிவளையில் உள்ள தெகிவளை விலங்கியல் பூங்காவிற்கு அருகில் உள்ள "ட்ராப்பிக் இன்" என்ற விடுதியில் குண்டு ஒன்று வெடித்தது. இங்கு இருவர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர், கொழும்பின் பல பகுதிகளிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேலும் குண்டுகள் வெடித்தன. கொழும்பு, தெமட்டகொடையில் உள்ள வீடொன்றில் குண்டுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் நடத்தப்பட்ட போது, குண்டுகள் வெடித்ததில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஒரே நாளில் இழந்த ஒட்டுமொத்த சந்தோசமும் நிம்மதியும்
இவ்வாறு நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் முழு நாட்டின் அமைதியும் சீர்குழைந்தது. எங்கு எப்போது குண்டு வெடிக்கும், எங்கே செல்வது என்ற ஒரு நிலைக்கு அந்த ஒரு நாளில் மக்கள் தள்ளப்பட்டனர். பண்டிகையை கொண்டாட ஆயத்தமாக இருந்த மக்களின் நிம்மதியை, சந்தோசங்களில் பேரிடி விழுந்தாற் போல அன்றைய தினம் சீர்குழைந்தது.
பொலிஸார் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர், ஆங்காங்கே மர்மப் பொதிகள், குண்டு வெடிப்புக்கள், பலர் கைது, இலங்கை முழுதும் மரண ஓலம் இப்படி உலகமே இலங்கையில் என்ன நடக்கின்றது என பார்த்துக் கொண்டிருக்கையில் தமது உறவுகளைத் தேடி வைத்தியசாலைகளின் வாயில்களிலும், ஆலய வாயில்களிலும் கதறலும் கண்ணீருமாய் பலர் நின்றிருந்தனர்.
இரத்தம் தோய்ந்த உடைகளுடனும், இரத்தமும் சதையுமாக இருந்த தம்மவர்களை தேடிய வெளிநாட்டவர்களும், தமது தேசமே கொலைக் களமாக மாறிய அவலத்தை நினைத்து கதறும் இலங்கை மக்களும் உலக அளவில் தலைப்புச் செய்திகளாயினர்.
இந்த கொடூரம் நிகழ்ந்து இன்று சரியாக நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. நீதி கோரி போராட்டங்கள் பல, தமது உறவுகளின் மரணத்திற்கு நியாயம் கேட்டு வெளிநாட்டவர்கள் பலர், இந்த சம்பவத்தை வைத்து நாட்டில் தமக்கு சாதகான ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த சிலர், நியாயம் கிடைக்கவில்லை என்றாலும் இந்த தாக்குதலை வைத்து இன்றும் அரசியல் பிழைப்பு நடத்தும் பலர் என இந்த நான்கு வருடங்கள் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கின்றது. நீதியும் கிடைக்கவில்லை, மக்களின் வாழ்வியலும் மாறவில்லை...!!
ஆம் மறந்தாயிற்று..... எங்களது ஆலயத்தில் கதறி துடித்த அந்த பெண்ணின் மகன் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலக்காகி சரியாக 11 மாதங்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி மரணித்தே போனார்..