பிரான்சில் தீவிரமடையும் காட்டுத்தீ : அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய ஜனாதிபதி மேக்ரோன்
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தவும், வரலாற்றுச் சிறப்புமிக்க போர்டோ நகரை நோக்கி தீ பரவுவதைத் தடுக்கவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரோன் அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
சுமார் 8.5 இலட்சம் மக்கள் வாழும் போர்டோ பெருநகரப் பகுதியில் இருந்து வெறும் 15 கிலோமீட்டர் தொலைவில் தீ பரவி வரும் நிலையில், வரும் நாட்களில் மீண்டும் வெப்ப அலை வீசக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்பு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தொடர் வெப்ப அலை
பிரபல திராட்சை மதுபான உற்பத்தி பிராந்தியமான ஜெரோண்டே பகுதியில் தற்சமயம் நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இதுவரை கண்டிராத அளவிலான காட்டுத்தீ பரவி வருவதாக உள்ளூர் மேயர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில் தொடர்ந்து பதிவாகி வரும் வெப்ப அலை மற்றும் வறட்சியால் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவி, இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான ஸ்பெயினிலும் காட்டுத்தீ காரணமாக 75,000இற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் மாற்றப்பட்டுள்ளனர்.
தலைநகர் மட்ரிட்டை நோக்கி நகர்ந்து வந்த தீயின் வேகம் தற்போது சற்று குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்குள்ள மக்களை மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர்.
ஐரோப்பா முழுவதையும் உலுக்கி வரும் இந்தத் தொடர் வெப்ப அலைகள் மற்றும் காலநிலை மாற்ற விளைவுகள், அப்பகுதியில் கடுமையான இயற்கை அழிவை ஏற்படுத்தி வருகின்றன.