100 நாட்கள் வைத்தியசாலையில்..! உயர்மட்டத்தினரை காப்பாற்ற முயற்சிக்கும் சுரேஷ் சலேவுக்கு கடைசி வாய்ப்பு
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கான சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னரே அவரிடம் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று(15.09.2026) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
100 நாட்கள் வைத்தியசாலையில் சுரேஷ் சலே
அவர் மேலும் தெரிவிக்கையில், சுரேஷ் சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வைத்து அவரிடம் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க முடியாது.

மருத்துவ சிகிச்சைகள் நிறைவடைந்த பின்னரே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்து விசாரணைகள் நடத்தப்படும். சுரேஷ் சலே தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்து ஆராய்வதற்கு விசேட மருத்துவர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசேட ஆய்வுக்குழு நியமனம்
அந்த குழுவின் அறிக்கைக்கு அமையவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும். தற்போது அவருக்குப் பெரியளவிலான சுகாதாரச் சிக்கல்கள் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. அவர் ஆரோக்கியமாகவே காணப்படுகின்றார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவரிடம் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள முடியாது.
அவர் எப்போதும் மருத்துவமனையிலேயே இருக்கப் போவதில்லை. சிகிச்சைகள் முடிவடைந்து வெளியேறியதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
அதற்கான கால அவகாசம் போதாத பட்சத்தில் விசாரணைக்காலம் மேலும் நீடிக்கப்படும். சுரேஷ் சலேவின் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளிக்குமாறு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு வைத்தியசாலை நிர்வாகத்திற்கு உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.