500 கோடி ரூபா கடத்தலை காட்டிக்கொடுத்த நபரை கொலை செய்ய முயற்சி - சிக்கிய முக்கிய புள்ளிகள்
கதிர்காமத்தில் 500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்குத் தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்ட குற்றக் கும்பலின் பிரதானி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செல்லக்கதிர்காமம் பகுதியில் வைத்து வலான மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் பிரிவினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி 325 கிலோகிராம் போதைப்பொருள், 8 சந்தேகநபர்கள் மற்றும் 6 வாகனங்களைக் கைப்பற்றுவதற்குக் காரணமாக இருந்த நபரை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்
இதற்காக அங்கொடை பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் 1.4 மில்லியன் ரூபாய் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை ஒப்பந்தத்தின் பிரதான சந்தேகநபரான மதுக்க சாமர என்ற மதுவாவிடம் இருந்து 2 கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலியான இலக்கத் தகட்டுடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரதான சந்தேகநபருடன் இங்கிரிய பிரதேசத்தில் வசித்து வந்த நலின் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்படும்போது தனது மகனுக்கு எழுதிய உயிரை மாய்ப்புக்கான கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை நடத்தி தமது உயிரைப் பணயம் வைத்து இந்தக் கொலையை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
பல கொலை குற்றச்சாட்டுக்கள்
பிரதான சந்தேகநபரான மதுவாவின் மைத்துனரான சுசாந்த என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபருக்கும் மதுவாவுக்கும் எதிராக வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.

சந்தேகநபர்கள் ஜீப் வாகனத்தில் கிரிந்த பகுதியில் அமைந்துள்ள தகவல் வழங்கியவரின் வீட்டிற்கு சென்று, அவரை கடத்திச் சென்று கத்திகளால் வெட்டிப் படுகொலை செய்து வீதியில் வீசிவிட்டு, குறித்த ஜீப் வாகனத்திற்குத் தீயிட்டு அழிக்கவும் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, குற்றச் செயலுக்காக பயன்படுத்தவிருந்த ஜீப் வாகனம் கடுவலை, ஹேவகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.