சுகாதார சேவையில் புதிய மாற்றம்: அரசு அறிமுகப்படுத்தும் 39 புதிய திட்டங்கள்
பொதுமக்களின் அதிகரித்து வரும் சுகாதார சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 39 புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அதனடிப்படையில், மருத்துவமனைகள் உள்ளிட்ட பெரும்பாலான அரச சுகாதார சேவை நிறுவனங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், அதிநவீன உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் நவீன சுகாதார சேவை தரநிலைகளுக்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது.
39 புதிய திட்டங்கள்
இதற்கமைய, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட யோசனைகளில் 41 திட்ட யோசனைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திட்ட யோசனைகளை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் த்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2027-2031 காலப்பகுதிக்குரிய அரசாங்க முதலீட்டுத் திட்டத்தில் யோசனைகள் தற்போது உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் 39 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தயார் நிலையைக் கருத்திற்கொண்டு, 2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதற்காக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த 39 புதிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.