சவூதி எரிபொருள் குழாய் முடக்கம்: மசகு எண்ணெய் விலை பீப்பாய் 108 டொலரைத் தாண்டியது
சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கத்திய - மேற்கத்திய மசகு எண்ணெய் விநியோகக் குழாய்த் தொகுதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இரு சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
இதன்மூலம், பிரெண்ட் ரகக் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை. 108.18 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
விநியோகத் தடை
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாகவே இந்த விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தாமல் மசகு எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதற்குச் சவூதி அரேபியா பயன்படுத்தி வந்த பிரதான பாதையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் மற்றும் சேதங்கள் காரணமாகச் சர்வதேசச் சந்தைக்கான சவூதியின் மசகு எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
பாதையைச் சீரமைக்கும் பணிகள்
தற்போதைய சூழ்நிலையில், இந்தப் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நிறைவடையச் சில வாரங்கள் வரை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தும் கணிசமாகக் குறைந்துள்ளதால், மத்திய கிழக்கில் நிலவும் இந்த தீவிரச் சூழல் தொடருமாயின், உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் அதிகரித்து ஒரு பீப்பாய் 120 முதல் 130 டொலர் வரை உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.