அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை - காலக்கெடுவுடன் கடுமையாகும் சட்ட நடவடிக்கை
அரச பணியில் இணையும் நபர்கள் குறிப்பாக குழந்தைகளுடன் நேரடியாக தொடர்புடைய பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் குற்றம்சாட்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற வேண்டும் என மகளிர் மற்றும் சிறுவர் நல அலுவல்கள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா பவுல்ராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கான உரிய அமைச்சரவை ஆவணத்தை சமர்ப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்
இந்த சான்றிதழை பொலிஸ் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் மூலம் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அரச பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தங்களது பணிக்கால இடைவெளி மற்றும் சம்பள உயர்வுகளை பெறும்போது, குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறும் சான்றிதழை புதுப்பித்து வழங்குவது கட்டாயமாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்த சான்றிதழின் அவசியத்தை அமைச்சரவை அறிக்கை மூலம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பொலிஸ் அல்லது தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து சான்றிதழைப்பெற நாங்கள் பரிசீலித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அரச பணியில் சேரும்போது, குழந்தைகளுடன் பழகும் வாய்ப்புள்ள பணிகளில் பணியாற்றுபவர்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகவோ அல்லது குற்றவாளிகள் என்றோ குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஒரு நாடாக நாம் முன்னேறிச்செல்வதற்கு இது போன்ற வி்டயங்கள் அவசியமானவை என விளக்கமளித்துள்ளார்.