தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் : ஐ.நா. கடும் கண்டனம்
கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்தக் கொடூர செயலுக்குப் பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினர்
இது குறித்து இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் - அன்ட்ரூ பிரெஞ்ச் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், "தெஹிவளையில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் மனவேதனையளிக்கின்றது.

எந்தவொரு குழந்தையும் இத்தகைய கொடூர வன்முறைக்கு இரையாகக் கூடாது. இதற்குப் பொறுப்பானவர்கள் உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதில் கூறியாக வேண்டும்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்" - என்று குறிப்பிட்டுள்ளார்.
வேறு ஒரு வீட்டை இலக்கு வைத்து
தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது கடந்த 11 ஆம் திகதி அதிகாலை ஓட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டு வீசித் தாக்குதல் நடத்தியிருந்தார்.

இந்தத் தாக்குதலில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தமையுடன் அவர்களின் தந்தையும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலாளிகள் வேறு ஒரு வீட்டை இலக்கு வைத்துத் தவறுதலாக இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.