நோர்வேயில் முக்கிய அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ள ஈழத்தமிழ் பெண் - அநுர அரசாங்கம் வாழ்த்து
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக ஈழத்தமிழ் பெண் கம்சி குணரத்னம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
“நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் கம்சி குணரத்தினத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்ட நோர்வே வாழ் இலங்கைச் சமூகத்தினருக்கு பெருமைக்குரிய தருணம் இதுவாகும். அமைச்சர் கம்சி குணரத்னம் தனது அமைச்சு பதவியை வெற்றிகரமான முன்னெடுக்க வாழ்த்துகிறேன்” என அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Heartiest congratulations to Minister Kamzy Gunaratnam on taking oaths as the Minister of Transport of Norway. A proud moment for Sri Lankan community in Norway given the shared heritage. I wish Minister Gunaratnam every success in leading her Ministry.
— Vijitha Herath (@HMVijithaHerath) September 11, 2026
முதலாவது தமிழ் பெண்
யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 38 வயதான கம்சி குணரத்னம், நோர்வேயில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தமிழ் பெண்ணாகும்.

கடந்த 11ஆம் திகதி தனது அமைச்சினை பொறுப்பெற்றுக் கொண்ட நிலையில், தமிழ் மக்களின் வாழ்த்தினை பெற்று வருகிறார்.
போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கொள்கைகள், அத்துடன் அஞ்சல் சேவைகள் தொடர்பான பொறுப்புகளுக்கு இவர் தலைமை தாங்குவார்.
1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கம்சாயினி குணரத்னம் என்ற பெயரில் பிறந்த இவர், யுத்த சூழ்நிலை காரணமாக சிறு வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு சென்றிருந்தார்.
பிரதான அமைச்சு பதவி
தனது 19 வயது முதல் தொழிலாளர் கட்சியின் மூலம் அரசியல் பயணத்தை ஆரம்பித்த கம்சி, சமகாலத்தில் பிரதான அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

ஒஸ்லோவின் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, பின்னர் ஒஸ்லோவின் துணை மேயர், நாடாளுமன்ற உறுப்பினர் என படிப்படியாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையில் போர் காரணமாக காணாமல் போனவர்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நோர்வே நாடாளுமன்றத்தில் கம்சி குணரட்னம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.