4 மில்லியன் ரூபாய் மோசடி: மேல் மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் அதிரடி கைது
மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் பிரசன்ன சஞ்சீவ, மோசடியான டெண்டர் நடைமுறைகள் செய்த குற்றத்திற்காக தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெண்டர் நடைமுறைகளை மீறி பயணிகள் போக்குவரத்து அனுமதிகளை வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 4.1 மில்லியனுக்கும் அதிகமான ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இன்று(15.09.2026) அவரைக் கைது செய்துள்ளது.
மோசடி குற்றச்சாட்டு
அவருடைய பதவிக் காலத்தில் மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை சட்ட விதிமுறைகளை மீறி, முறையான டெண்டர் நடைமுறைகளைப் பின்பற்றாமல் பயணிகள் போக்குவரத்து அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத அனுமதிகள் மூலமாக அரசாங்கத்திற்கு மொத்தம் 4,160,000 ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வெளித்தரப்பினருக்குச் சட்டவிரோதமாகப் பயனளித்து ஊழல் புரிந்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.