நாமல் ஜனாதிபதியானால் இலங்கையின் அடுத்த பிரதமர் யார்..! வெளிவரவுள்ள அறிவிப்பு
2029இல் நாமல் ராஜபக்ச எமது ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். ஆனால், பிரதமர் மற்றும் அமைச்சரவை குறித்து தேர்தல் நெருங்கும் போது நாங்கள் அறிவிப்போம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம்(28.09.2026) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐக்கிய மக்கள் சக்திக்கும், எமக்கும் எவ்வித பிரச்சினைகளோ அல்லது போட்டித் தன்மையோ கிடையாது. எங்களுடைய போராட்டம், அநுர குமார திஸாநாயக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராகத்தான்.
அடுத்த ஜனாதிபதியை உருவாக்கப் போகின்றோம்..
22ஆம் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டத்திற்கு எமது முழு ஆதரவையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தோம்.
ஆனால், அந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஒரு கட்சியாக உத்தியோகபூர்வமாக நாங்கள் கலந்து கொள்ளவில்லை. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

எங்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாக வெளிவரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை. உண்மையில் ஐக்கிய மக்கள் சக்தி குறித்து நாங்கள் சிந்திப்பதே இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கான தேவை எமக்கு இல்லை. அதற்குரிய முயற்சியையும் நாம் மேற்கொள்ளவில்லை.
எமது நோக்கம் இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியை உருவாக்குவதுதான். அதற்குரிய போராட்டத்தில் தான் நாங்கள் இருக்கின்றோம். எனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி எமக்குத் தேவையில்லை.
அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முன்னர் அடுத்த பிரதமர், அமைச்சர் யார் யார் என்பதை மக்களிடம் அறிவிப்பது பொருத்தமானதாக இருக்காது.

ஏனெனில், 2029ஆம் ஆண்டுக்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றன. நாங்கள் இப்போதே அடுத்த பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பெயர்களை அறிவித்துவிட்டால், எதிர்காலத்தில் திறமையான மற்றும் அறிவாற்றல் கொண்ட மேலும் பலரை நாங்களே இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
எனவே அரசியல் ரீதியாக அவசரமான அல்லது குறுகிய நோக்குடைய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளப் போவதில்லை. 2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது நாமல் ராஜபக்சதான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.
பிரதமர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளவர்கள் யார் என்பதைத் தேர்தல் நெருங்கும்போதுதான் நாங்கள் அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam